

புலந்த்சாஹர்: பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேரை கொலை செய்தவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் நகரின் குர்ஜா நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஜீத்து சைனி என்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது ஜீத்து சைனி என்பவரின் முகத்தில் அவரது நண்பர்கள் சிலர் கேக் பூசியதாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினர் இடையேகடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஜீத்து சைனி உள்ளிட்டோர் தப்பியோடினர். தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜீத்து சைனி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என்றும் போலீஸார் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, புலந்த்சாஹர் அருகே தராவு பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீஸார் கூறியபோது அவர்கள் வாகனத்தை திருப்பி தப்பியோட முயன்றனர். அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் ஜஜ்ஜார் சாலைப் பகுதியில் அவர்களை மடக்கினர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டை சில நிமிடங்களுக்கு நீடித்தது. இதில் ஒருவர் துப்பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்தார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து கீழே கிடந்த இளைஞரை மருத்துவமனைக்கு போலீஸார் தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில் அவர் ஜீத்து சைனி என்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் பிஸ்டல், துப்பாக்கி குண்டுகள், நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.