கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, மாநிலத்தில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி அறிவித்தது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், லக்ஷ்மிர் பந்தர் திட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையில் ரூ.500 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500, மற்றும் எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு மாதம் ரூ.1,700 வழங்கப்பட்டு வருகிறது.
வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு கட்டித் தரப்படும், அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் விநியோகிக்கப்படும், மக்களின் சுகாதார நலன்களைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் நகரத்திலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும், புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் தோல்வி அடைவோம் என்பதை பாஜக உணர்ந்திருக்கிறது. அதன் காரணமாகவே, மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு என்ஆர்சி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றின் பெயரால் மக்களின் குடியுரிமையைப் பறிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
பாஜக அரசு ஓர் ஆழமான சதியை அரங்கேற்றி வருகிறது. நாடு அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் முறையான சட்டம் - ஒழுங்கு இல்லை. மக்கள் அமைதி இன்றி உள்ளனர். பிளவுபடுத்தும் அரசியல் முன்னெடுக்கப்பட்டு போர் போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது’’ என குற்றம்சாட்டினார்.