

மம்தா
கொல்கத்தா: “தேர்தல் காலத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா நீண்ட நாட்கள் மேற்கு வங்கத்தில் தங்கியிருப்பது, பாஜகவின் வாக்கு சதவீதத்தைக் குறைப்பதற்குத்தான் வழிவகுக்கும்” என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தெற்கு தினாஜ்பூர் மற்றும் ஹரிராம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது: “கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அதே வாக்காளர் பட்டியலை சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்த மறுப்பது ஏன்?
வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்கள் இடம்பெற்றிருந்தால் கடந்த காலங்களில் பிரதமர் மோடியும் அவர்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் வெற்றி பெற்றார். எனவே அவர்தான் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்.
மேற்கு வங்கத்துக்குள் வெளியாட்கள் நுழைவதற்கு வசதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனங்களைப் பயன்படுத்திப் பணம் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை நான் வெளியிடுவேன்.
மேற்கு வங்கத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை, தேர்தல் ரீதியாக பாஜகவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்காது. மாறாக, தேர்தல் காலத்தில் அவர் இங்கு நீண்ட நாட்கள் தங்கியிருப்பது, அக்கட்சியின் வாக்கு சதவீதத்தைக் குறைப்பதற்குத்தான் வழிவகுக்கும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் தொடர்பாக மால்டாவில் புதன்கிழமை நீதித்துறை அதிகாரிகள் பல மணி நேரம் முற்றுகையிடப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு ஏஐஎம்ஐஎம் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகிய அமைப்புகளே காரணம்.
காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இந்தச் சம்பவத்தை தூண்டிவிட்டன. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவினர் அந்த முக்கிய குற்றவாளியை ஏஐஎம்ஐஎம் கட்சியிடமிருந்து கடன் வாங்கி இங்கு அழைத்து வந்துள்ளனர்” என்று மம்தா பானர்ஜி பேசினார்.