

கொல்கத்தா: “மேற்கு வங்கத்தில் வெற்றியை உறுதி செய்த பிறகு, டெல்லியை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தாவின் சவுரிங்கிப் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியது: “பாஜகவால் எங்களை தோற்கடிக்க முடியாது. நாங்கள் அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம். நான் வங்கத்தில் பிறந்தேன். இந்த வங்கத்திலேயே என் இறுதி மூச்சையும் விடுவேன்.
மேற்கு வங்கத்தில் வெற்றியை உறுதி செய்த பிறகு, நான் டெல்லியை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் நான் இதைச் செய்வேன்.
எனக்கு அதிகாரப் பதவி தேவையில்லை. டெல்லியில் பாஜக முழுமையாக தகர்க்கப்படுவதையே நான் விரும்புகிறேன். மேற்கு வங்கத்தில் அவர்களின் அழிவு தவிர்க்க முடியாதது. எனினும், டெல்லியிலிருந்தும் பாஜக வெளியேற்றப்பட வேண்டும்” என்று மம்தா ஆவேசமாகப் பேசினார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு என்று எதுவும் மிச்சமில்லை. அவர் எப்படி டெல்லிக்கு வருவார்?” என்று பதிலடி தந்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து வரும் 29-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறப்பது கவனிக்கத்தக்கது.