

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் அனைத்து 294 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக நினைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மேற்கு மிட்னாபூர் மாவட்டம், சந்திரகோனா பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தின் அனைத்து 294 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக கருதி நீங்கள் வாக்களிக்க வேண்டும். மாநிலத்தில் வாக்காளர் சேர்க்கையில் முறைகேடு நடக்கிறது. புதிய வாக்காளர்களைச் சேர்க்க ஒரே நாளில் சுமார் 30,000 படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அவர் தனது பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கொல்கத்தாவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார் பாஜக பிற மாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வாக்காளர் பட்டியலை கையாள முயற்சிக்கிறது.
பிஹார், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உ.பி.யைச் சேர்ந்தவர்களை மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் சேர்க்க பாஜக முயற்சிக்கிறது. பிஹாரில் செய்தது போலவே, வெளியூர் வாக்காளர்களை ரயில் மூலம் இங்கு அழைத்துவர அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக செயல்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் இருந்து சிலரின் பெயரை திட்டமிட்டு நீக்கும் பணி நடைபெறுகிறது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் மக்களின் குடியுரிமை, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பறித்து வருகின்றன. அவர்களை எதிர்த்து நாம் போராடுவோம். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.