

கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த வன்முறையை தூண்டும் கருத்துகளுக்காக அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப் போவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
ஹூக்ளியில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "வன்முறையை தூண்டும் கருத்துகளுக்காக அமித் ஷா சட்டரீதியான வழக்கை எதிர்கொள்ள இருக்கிறார். ஓர் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு, அவர் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்ததை ஏற்க முடியாது.
ஓர் உள்துறை அமைச்சர் என்ன மாதிரியான மொழியைப் பயன்படுத்துகிறார்? தேர்தலுக்குப் பிறகு மக்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தண்டிப்போம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய மனநிலையுடன், உங்களால் மேற்கு வங்கத்தில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்றார்.
முன்னதாக, ஏப்ரல் 24 அன்று, ஆராம்பாக்கில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “தீதியின் (மம்தா) குண்டர்கள் யாரும் 29-ஆம் தேதி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று நான் எச்சரிக்கிறேன். 29-ஆம் தேதி ஆராம்பாக் மக்களுக்கு ஏதேனும் தொல்லைகள் நேர்ந்தால், மே 5-ஆம் தேதிக்குப் பிறகு, அந்தக் குண்டர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு நாங்கள் அவர்களைச் சரிசெய்வோம்" என்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறுகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23 அன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதில் 91.78 சதவீதம் பேர் வாக்களித்தனர். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தனித்தும், இடதுசாரிகள் தனி அணியாகவும் களமிறங்கியுள்ளதால் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.