

புதுடெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டு விவகாரத்தில், மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று ட்ரோல் செய்ததற்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான பிளஸ்-2 மாணவ, மாணவிகளின் சிபிஎஸ்இ தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடிகளை சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய டெல்லி மாணவர் வேதாந்த் ஸ்ரீவஸ்தவா என்பவர், ‘பாகிஸ்தானியர்' மற்றும் ‘தேச விரோதி' என்று சமூக வலைதள பயனர்களால் கடுமையாகக் கேலி செய்யப்பட்டார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ‘ஓஎஸ்எம்' முறை காரணமாக தங்களுக்குக் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகச் சில மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
மேலும், டெல்லி மாணவர் வேதாந்த், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட விடைத் தாள் நகல் தன்னுடையது அல்ல என்றும், அதில் உள்ள கையெழுத்து தன்னுடைய கையெழுத்து இல்லை என்றும் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, வேதாந்தின் கணக்கு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: கல்வித் துறையில் மத்திய அரசின் தோல்விகளால் சிபிஎஸ்இ மாணவர்களும், நீட் தேர்வர்களும் பலி யாடாகி உள்ளனர். மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்றும் தேச விரோதிகள் என்றும் பச்சை குத்துவது நியாயமா ? 17 வயதுடைய சிபிஎஸ்இ தேர்வர்களாயினும் சரி, அல்லது நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களானாலும் சரி.
நாட்டின் கல்வி அமைப்பையே சீர்குலைக்கச் சதி செய்து, தேசத்தின் இளைஞர்களைத் தனது ஊழல் வலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிக்க வைத்துள்ளது.
திறமைகளை வளர்த்தெடுப்பதில் ஒரு காலத்தில் முக்கியப் பங்காற்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்தும், தற்போது பாஜக தலைமையிலான அரசின் கீழ் வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் ஆகியவை நாட்டின் திறமையாளர்களை உருவாக்கிய ஒரு காலம் இருந்தது.
ஆனால் இப்போது, பாஜகவின் கொள்ளையடிக்கும் போக்கின் காரணமாக, நம்மால் ஒரு தேர்வு வாரியத் தேர்வைக்கூட முறையாக நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தகைய அவல நிலைக்குத்தான் அவர்கள் நம்மைத் தள்ளியுள்ளனர். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.