

மும்பை: மகாராஷ்டிரா அரசு ‘மாஜி லட்கி பஹின் யோஜனா’ என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதில் 2.4 கோடி பேர் பயன்பெற்று வந்தனர். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், இ-கேஒய்சி சரி பார்ப்பு பணிகளை பயனாளிகள் 8 மாத அவகாசத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்காத சுமார் 80 லட்சம் பேரை திட்டத்திலிருந்து அம்மாநில அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் இதற்கு முன் நீக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து, தற்போது நீக்கப்பட்டோர் எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதையடுத்து மொத்தமுள்ள 2.4 கோடி பயனாளிகளில் தற்போது 38 % பேர் குறைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 முதல் 55 லட்சம் பெண்கள் இ-கேஒய்சி நடைமுறையை முடிக்கவில்லை. 12 லட்சம் பெண்களின் வருமானம் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பைத் தாண்டியுள்ளது.
4.5 லட்சம் பேர் 65 வயது வரம்பைக் கடந்தவர்கள். இத்திட்டத்தில் முறைகேடாக பலன் பெற முயன்ற 14,000 ஆண்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 28 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்.