

மும்பை: மகாராஷ்டிராவில் பெண் கைதிகளுக்கென்றே மாநிலத்தின் முதல் திறந்தவெளி சிறைக் குடியிருப்பை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதியுள்ள கைதிகள் தங்கள் குழந்தைகள், குடும்பத்தினருடன் தங்கி, வேலைக்குச் சென்று, சிறைக்கு வெளியிலான வாழ்க்கைக்கு படிப்படியாகத் தயாராகலாம். நாசிக், சத்ரபதி சம்பாஜிநகர் ஆகிய இடங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தகுதியான கைதிகளையும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் கண்டறிந்து, அடுத்த ஆண்டே இந்த வசதிகளை செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதி டாங்ரே தலைமையிலான இக்குழுவில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதிகா ரஸ்தோகி உறுப்பினராகவும், சிறைத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சுஹாஸ் வார்கே உறுப்பினர்-செயலாளராகவும் செயல்படுகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பெண் கைதிகள் தங்களது குழந்தைகள், குடும்பத்தினருடன் ஒரே வளாகத்தில் தங்கி வாழ அனுமதிக்கப்படுவார்கள். தற்போது பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகள், இங்கு தாயாருடன் தங்கி அருகிலுள்ள பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யப்படும். உறுதியான எண்ணிக்கை தெரிந்த பிறகு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளூர் பகுதியில் கண்டறியப்படும்.
இந்தியச் சிறைப் புள்ளிவிவரங்கள் 2024 அறிக்கையின்படி, நாட்டிலுள்ள 103 திறந்தவெளிச் சிறைகளில் 19 மகாராஷ்டிராவில் உள்ளன. ஆனால், பெண்களுக்கென புனே எரவாடா மகளிர் சிறை, அகோலா ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே திறந்தவெளிச் சிறை வசதிகள் உள்ளன. ராஜஸ்தானின் சங்கானேர் திறந்தவெளிச் சிறையில் 400-க்கும் மேற்பட்ட கைதிகள் குடும்பத்துடன் தங்கி, மளிகைக் கடை நடத்துவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர்.