

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சுமார் 6,500 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 4,500 பேர் ஆலோசனைக்குப் பிறகு யாசகம் எடுப்பதைக் கைவிட்டுள்ளனர், 1,600 பேர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் 172 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து யாசகம் எடுப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் மங்கிலால் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தூரின் சரபா சந்தையில், பால் பேரிங் பொருத்தப்பட்ட ஒரு வண்டியில் அமர்ந்தபடி மங்கிலால் யாசகம் எடுத்துள்ளார். மாற்றுத் திறனாளி போலத் தோற்றமளிக்கும் இவர், யாரிடமும் வாய் திறந்து யாசகம் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருப்பாராம். மக்கள் அனுதாபப்பட்டு அவருக்கு யாசகம் கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு 400 முதல் 500 ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.
ஆனால் யாசகம் எடுத்த பணத்தை அவர் வியாபாரிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்துள்ளார். மாலை நேரங்களில் அவரே நேரில் சென்று வட்டியை வசூலித்துள்ளார். அவர் சுமார் 4- 5 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்திருக்கலாம் என்றும், வட்டியுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாகவும் அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
பரம ஏழை என்று கருதப்பட்ட அவருக்கு, மூன்று மாடி கட்டிடம் உட்பட மூன்று வீடுகள் முக்கிய இடங்களில் உள்ளன. 3 ஆட்டோக்கள் ஒரு மாருதி டிசையர் காரை வாடகைக்கு விட்டுள்ளார். ஏற்கெனவே பல சொத்துகள் இருந்த போதிலும், மாற்றுத் திறனாளி என கூறிக்கொண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ஒரு வீட்டையும் அவர் பெற்றது தெரியவந்துள்ளது.
இதுகு றித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறும்போது, “மங்கிலால் தற்போது உஜ்ஜைனியில் உள்ள சேவா தாம் ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் கடன் வாங்கிய வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.