

ஸ்ரீ நகர்: ஹனிடிராப் வலையில் சிக்கி பாகிஸ்தான் உளவாளியாக மாறிய காஷ்மீர் லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை வேவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த அமன் (24) என்ற லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமூக வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் பெண் உளவாளி ஒருவரின் தொடர்பு அமனுக்கு கிடைத்துள்ளது. அவரை ‘ஹனி-டிராப்’ வலையில் சிக்க வைத்த பாகிஸ்தான் பெண், இந்தியாவின் பாதுகாப்பு விவரங்களை பாகிஸ்தான் உளவாளிகளுடன் பகிர்ந்து கொள்ள அவரை வற்புறுத்தியுள்ளார்.
அதன்படி, கதுவா பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே சிம் கார்டு பொருத்திய அதிநவீன சிசிடிவி கேமரா ஒன்றை அமன் நிறுவியுள்ளார். இதன்மூலம், இந்திய ராணுவ வாகனங்களின் நடமாட்டங்கள், ராணுவப் பிரிவுகளின் இடமாற்றம் மற்றும் ஆயுத தளவாடங்களின் போக்குவரத்து ஆகியவற்றை பாகிஸ்தான் உளவாளிகள் தங்களின் இருப்பிடத்தில் இருந்தபடியே நேரலையாக கண்காணித்து வந்துள்ளனர்.
இதையறிந்து், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையி்ல் அமனின் வீட்டில் இருந்த அதிநவீன கேமரா மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அமன் மீது இந்தியாவின் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தனர்.