புதுடெல்லி: நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் இதில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், “வணிக பயன்பாட்டுக்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்க வேண்டாம் என்று எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நிலைமை நாள்தோறும் மோசமாகிறது. மத்திய அரசு நாட்டு மக்களிடம் பொய்களைக் கூறி வருகிறது” என குற்றம் சாட்டினார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ், “நாட்டில் CNG நெருக்கடி மிகவும் தீவிரமாக உள்ளது. உண்மையான நிலையை அரசு வெளிப்படுத்தவில்லை. பல ஹோட்டல்கள் மற்றும் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும், கவலைப்பட வேண்டியதில்லை என்று அரசு கூறுகிறது. ஆனால் ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் நிலைமை தீவிரமாக இருப்பதாகக் கூறுகின்றனர். அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது” என குறிப்பிட்டார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, “ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நமது பிரதமர் இஸ்ரேலுக்கு சென்றார். போர் முதலில் இஸ்ரேல் தரப்பிலிருந்து தொடங்கியது, அமெரிக்கா அதை ஆதரித்தது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பெட்ரோலிய அமைச்சர் பதிலளித்தபோது, ‘நமக்கு 72 நாட்களுக்கு போதுமான எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. LPG கையிருப்பும் உள்ளது, LNG பற்றாக்குறையும் இல்லை. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார். ஆனால் விலை குறைந்திருந்தபோது பொதுமக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை; எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெற்றன. விலை உயர்ந்தவுடன் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. இன்று எரிவாயு சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புனேயில் ஒரு சுடுகாடு கூட மூடப்பட்டுள்ளது. இதற்காக அரசு என்ன தயாரிப்புகளை செய்தது?” என கேள்வி எழுப்பினார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகத் ராய் கூறுகையில், “எல்பிஜி விலை உயர்ந்துள்ளது; விமான கட்டணங்களும் அதிகரித்து வருகின்றன. இது மத்திய அரசின் தோல்வி. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து சலுகைகள் வழங்கியிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.