கேஜ்ரிவால் நேர்மையானவர் எனில் மதுபான கொள்கையை திரும்ப பெற்றது ஏன்? - பாஜக கேள்வி
புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் நேர்மையானவர் எனில் மதுபானக் கொள்கையை அவரது அரசு திரும்பப் பெற்றது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக, இந்த வழக்கில் சட்ட நடைமுறை இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கல்வி அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு, டெல்லி நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ‘‘நான் ஊழல்வாதி அல்ல. கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித்திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். கேஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. நான் என் வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர். அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம். உண்மை மீண்டும் வென்றுள்ளது’’ என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதான்ஷு திரிவேதி, ‘‘ஆதாரங்கள் இல்லாததன் காரணமாகவே நீதிமன்றம் அவரை (கேஜ்ரிவால்) விடுவித்துள்ளது. இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை. இந்த வழக்கில் சிபிஐ அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்.
தீர்ப்பை விரிவாகப் படித்த பிறகு பாஜக தனது முழுமைான பதிலை வழங்கும். குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றால் குற்றச்சாட்டுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தேசிய தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கீழ் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அளித்துள்ளது. ஆனால், கடந்த காலங்களில் (இந்த வழக்கில்) டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கூட வலுவான கண்டன கருத்துகளைத் தெரிவித்துள்ளன. மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தாக்குப் பிடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். சட்ட செயல்முறை இன்னும் முடிவடையவில்லை.
கேஜ்ரிவால் மிகவும் நேர்மையானவராக இருந்தால், முறைகேடுகள் கண்டறியப்பட்ட உடன் டெல்லி அரசு ஏன் பின்வாங்கி கொள்கையை மாற்றியது? பல தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் ஏன் அழிக்கப்பட்டன. கமிஷன் 6%-ல் இருந்து 12% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், விற்பனையாளர்களின் எண்ணிக்கை ஏன் இவ்வளவு கடுமையாகக் குறைக்கப்பட்டது? இந்த முடிவுகள் தீவிரமான மற்றும் நியாயமான கேள்விகளை எழுப்புகின்றன. ஊழல் என்பது வெறும் கற்பனை அல்ல; நீதிமன்றம் மற்றும் பொதுமக்கள் முன் வைக்கப்படும் பிரச்சினை.
அப்போதைய டெல்லி அரசின் மதுபான கொள்கை மதுபான விலையை உயர்த்தியது. இதனால், வீடுகள் பாதிக்கப்பட்ட, ஒழுக்க ரீதியாக திவாலான அரசாங்கத்தை நடத்தியதற்காக அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். டெல்லி மக்கள் ஏற்கனவே வாக்குச்சீட்டு மூலம் தங்கள் தீர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்போது நீதித்துறை தனது கடமையைச் செய்யும். நீதித்துறை ஆய்வுகள் நிலுவையில் இருப்பதால், இறுதி தீர்ப்பு இன்னும் எழுதப்படவில்லை’’ என தெரிவித்துள்ளார்.