

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 12 முதல் 20-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் திருமலை, திருப்பதியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், எஸ்பி சுப்புராயுடு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் நேற்று விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா தலைமையில் தேவஸ்தானத்தின் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அப்போது ரவிசந்திரா பேசியதாவது: இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாக்களில் பக்தர்களுக்கு தடையின்றி லட்டு பிரசாதங்கள் வழங்கப்படும். அதாவது பிரம்மோற்சவ நாட்களில் தினமும் 10 லட்சம் லட்டு பிரசாதங்கள் நிலுவையில் இருக்கும். கருட சேவையன்று கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன் அனைவரும் சுவாமியை வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருப்பதி - திருமலை இடையே கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். திருமலையின் அனைத்து இடங்களிலும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து இலவச உணவு வழங்கப்பட வேண்டும். குடிநீர், கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.
ரதசப்தமியன்று ஒரே நாளில் 3.75 லட்சம் பக்தர்கள் வாகன சேவைகளை கண்டு களித்தனர். அதேபோல் பிரம்மோற்சவ விழாவும் ஒரு சவாலாகவே இருக்கும். எந்த ஒரு குறையும் இன்றி பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.