

கே.என்.நேரு
புதுடெல்லி: நகராட்சித் துறை அதிகாரி கள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவை ஏற்று, வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரியும் முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது எனவும், அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் கூறி கே.என்.நேரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சகோதரர்கள் மனு தள்ளுபடி: இந்நிலையில் இந்த முறைகேடு புகார் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட கே.என்.நேருவின் சகோதரர்களான கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் மற்றும் டி.கவிபிரசாத், டி.ரமேஷ், ஆர்.நாராயணன், தியாகராஜன் செல்வமணி ஆகியோரும் தங்களுக்கு எதிராக வழக்குப் பதிய, பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நேருவின் சகோதரர்கள் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.