

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
கலபுர்கி: “இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் வந்தே மாதரம் பாடலை முழுவதுமாக பாடவில்லை?” என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நோக்கி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக, இன்று (ஆக.23 - சனிக்கிழமை) பாஜக தேசியத் தலைவர் நிதின் நாப்கின் தலைமையில் அக்கட்சியின் புதிய தேசியக் குழுவின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் வந்தே மாதரம் பாடலை பாடும் விவகாரத்தில் காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானத்தை கண்டித்து பாஜக தீர்மானம் நிறைவேற்றியது.
அதற்கு பதிலடி தரும் வகையில் கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
“குஜராத் மாநில முதல்வராக பதிமூன்று ஆண்டுகள், தேசத்தின் பிரதமராக 12 ஆண்டுகளை நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார். அப்படி இருக்கும் சூழலில் இத்தனை ஆண்டுகளாக அவர் ஏன் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதுமாக பாடவில்லை? பாஜக ஆட்சியில் உள்ள மாநில முதல்வர்கள் ஏன் அதை முழுவதுமாக பாடவில்லை?
1937-ல் காங்கிரஸ் செயற்குழுவில் ‘வந்தே மாதரம்’ பாடலில் உள்ள ஆறு சரணங்களில் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல், ரபீந்திரநாத் தாகூர் என தேச தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி கடந்த 90 ஆண்டுகளாக தேசத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முடிவின் படியே பிரதமர் மோடியும் இத்தனை காலம் அதனை பாடி வந்தார். ஆனால், இப்போது வாக்கு அரசியலுக்காக அதில் மாற்றம் கொண்டு வருகிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது தேச பாடலில் மாற்றம் மேற்கொள்வது அதன் மீதான பற்றை சீர்குலைக்கும்” என்று கார்கே குற்றச்சாட்டு வைத்தார்.
‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என்ற 1937-ஆம் ஆண்டு தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஆகஸ்ட் 19, 2026 அன்று காங்கிரஸ் செயற்குழு எடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இது அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.