

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒரு பெண் இஸ்லாம் மதத்துக்கு மாறி, வெம்பயம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்துள்ளார்.
பின்னர் இருவரும் இங்கிலாந்துக்கு சென்று வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண்ணின் முதல் கணவரின் மகன் (16) இங்கிலாந்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவனிடம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பான சில வீடியோ காட்சிகளைக் காட்டி அதில் சேர வலியுறுத்தி உள்ளனர்.
பின்னர் கேரளா திரும்பியதும், மகனை ஆட்டிங்கல் நகரில் உள்ள மத ரீதியிலான கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவனுடைய நடவடிக்கையில் சில மாற்றங்கள் இருப்பதை உணர்ந்த ஆசிரியர்கள், அவனுடைய தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உறவினர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், வெஞ்சாரமூடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் அந்த இளைஞரை சேர்த்துவிட அவனது தாயும், வளர்ப்பு தந்தையும் வலியுறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.