

கண்ணூர்: கண்ணூர் ரயில் நிலையத்தில் இன்று (பிப்.25) காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் சங்கம் (KSU) நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின்போது, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை முதல்வர் பினராயி விஜயன் சந்தித்தார்.
கண்ணூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஏற வந்தபோது டிக்கெட் கவுண்டர் அருகே, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜின் கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஆலப்புழாவில் மருத்துவ அலட்சிய சர்ச்சையை தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறையில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து குற்றம்சாட்டி அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆலப்புழாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அலட்சியம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் பொறுப்பேற்கக் கோரி கே.எஸ்.யு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறது.
பினராயி விஜயன் கண்டனம்:
இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், ‘அமைச்சர் மீதான தாக்குதல் காங்கிரஸ் மாணவர் பிரிவின் இழிவான அரசியலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. அங்கு நடந்தது எந்த வகையான போராட்டமும் அல்ல; மாறாக வன்முறையாளர்கள் கும்பலின் வன்முறை.
கேரளாவின் பொது சுகாதார அமைப்பு நாடு தழுவிய அளவில் மிகவும் மதிக்கப்படுகிறது. காங்கிரஸ் ஏதோ ஓர் இடத்தில் நடக்கும் சம்பவங்களை அரசியலாக்குகிறது. இதுபோன்ற செயல்களை அரசியலாகப் பார்க்க முடியாது, அரசியல் சீரழிவாக மட்டுமே பார்க்க முடியும்.
தங்கள் ஆதரவாளர்களை கட்டவிழ்த்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவோ அல்லது மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கவோ முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்பக்கூடாது.
இந்தச் சம்பவத்துக்கான பொறுப்பு முழுக்க முழுக்க காங்கிரஸ் மற்றும் யுடிஎஃப் தலைமையிடம் உள்ளது. இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மேலும், கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் வீணா ஜார்ஜை பிரனாயி விஜயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.