இஸ்லாமிய மதகுரு கருத்துக்கு கேரள அமைச்சர் பதிலடி

இஸ்லாமிய மதகுரு கருத்துக்கு கேரள அமைச்சர் பதிலடி
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளத்தின் முக்கிய இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான சமஸ்தா கேரளா ஜம்யத்துல் உலமாவின் காந்தபுரம் பிரிவு, மத நிகழ்வுகளில் பெண்கள் பங்கேற்பது தொடர்பாக உள்ளூர் மதரஸாக்களுக்கு சமீபத்தில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கொச்சியில் நடைபெற்ற ஹுப்புல் ரசூல் மாநாட்டில் கலந்து கொண்ட பிரபல இஸ்லாமிய மதகுருவும் இந்தியாவின் தலைமை முஃப்தியுமான காந்தபுரம் அபுபக்கர் முஸ்லியா, "பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டும். அவர்கள் பொதுவெளிக்கு வரக்கூடாது. திருக்குர்ஆன் அவ்வாறு கூறுகிறது. மேலும், பொது இடங்களுக்குப் பெண்கள் கட்டுப்பாடின்றிச் செல்ல அனுமதிப்பது பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

இதுகுறித்து கேரள தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா கூறும்போது, "இந்திய அரசியலமைப்புச் சட்டம், பாலின வேறுபாடின்றி, பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. மக்களுக்கு சுதந்திரமான மற்றும் விருப்பமான வாழ்க்கையை வாழ உரிமை உண்டு. மேலும், இதுபோன்ற கருத்துகள் பெண்களை பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளுகின்றன. நமது பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடியவர்கள். அவர்களே சிறந்த ஆட்சியாளர்கள். எனவே, இதுபோன்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

இஸ்லாமிய மதகுரு கருத்துக்கு கேரள அமைச்சர் பதிலடி
தி ஹேக் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in