

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.
கேரளாவில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநில தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஆளும் எல்டிஎஃப்-ஐ விட அதிக கிராம மற்றும் வட்டாரப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் முன்னிலை வகித்தது.
மாநில தேர்தல் ஆணையம் (எஸ்இசி) பகிர்ந்துகொண்ட நிலவரங்களின்படி, பிற்பகல் 12.50 மணி நிலவரப்படி, ஆளும் எல்டிஎஃப் 366 மற்றும் யுடிஎஃப் 473 கிராம பஞ்சாயத்துகளில் முன்னிலை வகித்தன.
யுடிஎஃப் 55 நகராட்சிகள், 8 மாவட்ட பஞ்சாயத்துகள், 81 பிளாக் பஞ்சாயத்துகள் மற்றும் 4 மாநகராட்சிகளிலும் முன்னிலை வகித்தது. அதே நேரத்தில், எல்டிஎஃப் 28 நகராட்சிகள், 6 மாவட்ட பஞ்சாயத்துகள், 65 பிளாக் பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு மாநகராட்சியில் முன்னிலை வகித்தது.
பாஜக தலைமையிலான என்டிஏ 26 கிராம பஞ்சாயத்துகள், 2 நகராட்சி மற்றும் ஒரு மாநகராட்சியில் முன்னிலை வகிக்கிறது. முழுமையான முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தலைமையிலான என்டிஏ பெரும்பான்மை எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. 101 இடங்களைக் கொண்ட மாநகராட்சியில் என்டிஏ தற்போது 49 இடங்களிலும், எல்டிஎஃப் 28 இடங்களிலும், யுடிஎஃப் 19 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மாநகராட்சி மன்றத்தில் பெரும்பான்மையைப் பெற என்டிஏ-க்கு 51 இடங்கள் தேவை. இதனால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற இரண்டு சுயேச்சைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.