கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி: மார்க்சிஸ்ட்டுக்கு கடும் பின்னடைவு - முழு விவரம்

கேரள உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை திருவனந்தபுரத்தில் நேற்று கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்.படங்கள்: பிடிஐ

கேரள உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை திருவனந்தபுரத்தில் நேற்று கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்.படங்கள்: பிடிஐ

Updated on
2 min read

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 3 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி முதல்முறையாக கைப்பற்றி உள்ளது.

கேரளாவில் 6 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள், 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,200 உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 23,612 வார்டுகளும் உள்ளன. இதில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நிர்வாக காரணங்களால், மட்டனூர் நகராட்சிக்கு மட்டும் 2027 செப்டம்பரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) அதிக உள்ளாட்சி அமைப்புகளில் முன்னிலையில் இருந்தது. ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎஃப்) பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

3 மாநகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி: கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் கொச்சி, திருச்சூர், கண்ணூர் மாநகராட்சிகள் காங்கிரஸ் கூட்டணி வசமாகியுள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணிமுதல்முறையாக கைப்பற்றியுள்ளது. கொல்லம், கோழிக்கோடு மாநகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

மொத்தம் உள்ள 14 மாவட்ட ஊராட்சிகளில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணிகள் தலா 7 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றியுள்ளன. 86 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 54, மார்க்சிஸ்ட் கூட்டணி 28 நகராட்சிகளை கைப்பற்றின. 152 ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரஸ் கூட்டணி 79, மார்க்சிஸ்ட் கூட்டணி 63-ஐ பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 504, மார்க்சிஸ்ட் கூட்டணி 341 ஊராட்சிகளில் வெற்றி பெற்றன. ஒரு நகராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 64 ஊராட்சிகளில் இழுபறி நிலை காணப்படுகிறது. அரசியல் நோக்கர்கள் கூறும்போது, ‘‘அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல் கருதப்படுகிறது. இந்த தேர்தல் காங்கிரஸ் கூட்டணிக்கு ஊக்கம் தருவதாக உள்ளது.

மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த இரு கூட்டணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக பாஜக உருவெடுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அபார வளர்ச்சி அடைந்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியதோடு, இதர மாநகராட்சிகளிலும் குறிப்பிடத்தக்க வார்டுகளை பாஜக பெற்றுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

திருவனந்தபுரத்தை கைப்பற்றியது பாஜக: திருவனந்தபுரம் மாநகராட்சியில் 101 வார்டுகள் உள்ளன. இதில் விழிஞ்சம் வார்டு வேட்பாளர் ஒருவர் காலமானதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. இதர 100 வார்டுகளில் 50 வார்டுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 29, காங்கிரஸ்கூட்டணிக்கு 19 வார்டுகள் கிடைத்தன. 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சி கடந்த 45 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கூட்டணியின் கோட்டையாக இருந்தது. முதல்முறையாக இந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இது கேரள அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: கேரள பாஜக தொண்டர்களின் பல ஆண்டு உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. அவர்களது கடின உழைப்பால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இது கேரள அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை. கேரள மக்களின் கனவுகளை நனவாக்க பாஜக மிகக் கடினமாக உழைக்கும். திருவனந்தபுரத்துக்கு நன்றி. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கேரள உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை திருவனந்தபுரத்தில் நேற்று கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்.படங்கள்: பிடிஐ</p></div>
ரூ.2.5 லட்சத்துக்கு வாங்கிய வெளிநாட்டு கிளியை பிடிக்க முயன்ற தொழிலதிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in