

ஜம்மு: தேச விரோத நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்முவில் உள்ள 'காஷ்மீர் டைம்ஸ்' ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) இந்த சோதனையை நடத்தியது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் கூறுகையில், “இந்த ஆங்கில நாளிதழ் அனுராதா பாசின் ஜம்வால் என்பவருக்கு சொந்தமானது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது, நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்ப முயன்றது மற்றும் பிரிவினைவாத கருத்துகளை பரப்ப முயன்றது தொடர்பாக இந்த நாளிதழ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சோதனை நடத்தப்பட்டது" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சோதனையில் ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த சோதனைக்கு காஷ்மீர் டைம்ஸ் நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது.