

பெலகவி: நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் ஆகியவற்றைக் கண்டித்து கர்நாடகாவின் பெலகாவியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
பெலகாவியில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தைக் கண்டிக்கும் பதாகைகள் மற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமார், ‘‘நேஷனல் ஹெரால்டு என்பது நமது நாட்டின் பெருமை. அது நமது சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடையது. ஜவஹர்லால் நேருவால் ஏற்படுத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை என்னை தொடர்புபடுத்தி இருக்கிறது. நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எழுப்புகிறேன். ஏன் அவர்கள் இதுவரை எனக்கு முதல் தகவல் அறிக்கையின் நகலை வழங்கவில்லை? அமலாக்கத் துறையின் முகம் இன்று கிழிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
போராட்டம் குறித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரால் தொடங்கப்பட்டது. மாபெரும் வெற்றியைப் பெற்ற ஒரு திட்டம் இது. வேலை தேடி வெளியே செல்ல முடியாதவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வழங்கும் திட்டம் இது. இந்த திட்டத்தால் கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டம் நமது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் பெயரில் உள்ளது. அவ்வாறு இருக்க காந்தியின் பெயரை ஏன் நீக்க வேண்டும்? இந்திய வரலாற்றிலேயே மிகவும் வெற்றி பெற்ற திட்டமாக இது இருப்பதால், இதனை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கிவிட்டார்கள்’’ என குற்றம் சாட்டினார்.