

கான்பூர்: போலீஸ் அதிகாரி உட்பட 12 பேரை ஏமாற்றி ரூ.8 கோடி மோசடி செய்து திருமணம் செய்த பெண்ணை உ.பி மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் திவ்யான்ஷி சவுத்ரி (30), பி.எட் படித்துவிட்டு சிடெட் தேர்வெழுத தயாராகி வருவதாக திருமண தரகர்களிடம் கூறி வந்துள்ளார். படித்த, குடும்பப் பாங்காக உள்ள இவரைப் பார்த்த ஆண்கள் திருமணத்துக்கு தயார் என்று கூறியுள்ளனர்.
முதலில் ஆண் ஒருவரைத் தொடர்புகொண்டு அவரது நம்பிக்கையைப் பெற்ற பின்னர் அவருடன் நெருக்கமாக பழகுவார் திவ்யான்ஷி. அதற்கடுத்த சில நாட்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்தார் என்று அவரை மிரட்டுவார். மேலும் போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து மிரட்டுவார். இதனால் பயந்துபோன ஆண்கள் பணம் கொடுத்து தப்பித்துவிடுவர். இதுபோன்று பல ஆண்களிடம் திவ்யான்ஷி கைவரிசையைக் காட்டியுள்ளார்.
மேலும் 3 பேரை மணந்து அவர்களை மிரட்டி பல கோடி ரூபாயை இவர் சுருட்டிக் உள்ளார். அண்மையில் கான்பூரைச் சேர்ந்த ஆதித்ய குமார் லோதவ் என்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை 4-வது நபராக மணந்தார் திவ்யான்ஷி. அப்போது திவ்யான்ஷியின் போக்கில் சந்தேகம் கொண்ட ஆதித்யகுமார், திவ்யான்ஷி குறித்து விசாரித்தபோது அவர் பலரை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கான்பூர் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “திவ்யான்ஷி இதுவரை 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இதில் 2 பேர் வங்கி மேலாளர்கள். அவர்கள் மீது முதலில் பாலியல் வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்யும் திவ்யான்ஷி பின்னர், போலீஸ் நிலையத்துக்கு வெளியே பணத்தை செட்டில் செய்துகொண்டு வழக்கை முடித்துக் கொள்வார். இதேபோல் எஸ்.ஐ. ஆதித்யகுமார் உட்பட 2 அரசு அதிகாரிகளையும் இவர் திருமணம் செய்தார். சுமார் ரூ.8 கோடி வரை இவர் மோசடி செய்துள்ளார்.
இவருக்கு பல அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்களுடன் பழக்கம் உள்ளது. பலரின் உதவியுடன் இந்த பாலியல் வன்கொடுமை பொய் புகார்கள் உள்ளிட்ட சம்பவங்களை அரங்கேற்றி வந்தார். அவரது செல்போனில் உள்ள யுபிஐ ஐ.டி.யை சோதனை செய்து பார்த்ததில் கோடிக்கணக்கான பணம் இவரது வங்கிக் கணக்குகளுக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது” என்றார்.