

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் நாளை பொறுப்பேற்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் இடம் பெற்றவரான சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நாளை பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று மாலை பதவி விலகும் நிலையில், சூர்ய காந்த் நாளை பதவியேற்க உள்ளார்.
1962, பிப். 10ல் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்ய காந்த், சிறிய நகரத்தின் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த சூர்ய காந்த், அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நாளை தனது பணியை தொடங்க உள்ள சூர்ய காந்த், கிட்டத்தட்ட 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார். வரும் 2027, பிப். 9ம் தேதி அவர் பதவி விலகுவார்.