

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம், ஹல்திவானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 8-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் அந்த இடம் ‘சுத்திகரிப்பு’ செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ‘சுத்திகரிப்பு’ நிகழ்ச்சி தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், வேத மந்திரங்கள் முழங்க ஒரு பூசாரி ‘ஹவனம்’ (ஹோமம்) செய்வது இடம்பெற்றுள்ளது. பாஜகவுடன் தொடர்புடைய ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பே இதைச் செய்ததாக, உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் குற்றம் சாட்டி இருந்தார்.
மல்லிகார்ஜுன கார்கே பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்தச் சடங்கு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட கணேஷ் கோடியல், சாதியின் பெயரால் பாஜக சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே நேற்று இப்பிரச்சினைக் குறித்து பேசும்போது, “உத்தராகண்ட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றிய போது எந்த சமூகத்தையோ அல்லது மதத்தையோ குறிப்பிட்டு பேசவில்லை.
அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துதான் பேசினேன். ஆனால், எனது உரைக்குப் பிறகு அந்த மேடையை பாஜக தொண்டர்கள் ‘ஹவனம்’ நடத்தி சுத்திகரிப்பு செய்துள்ளனர். ஜனநாயகத்தில் இதுதான் நடைமுறையா? நான் எதிர்க்கட்சித் தலைவர். இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்க ஒருபோதும் விரும்பவில்லை. தீண்டாமையைவிட பெரிய பாவம் உலகில் எதுவும் இல்லை. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதைச் செய்தவர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசும்போது, “நாங்கள்தான் (பாஜக) இதைச் செய்தோம் என்று தொடர்ந்து கூற வேண்டாம். அங்கு நடந்தது குறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்படும். பாஜக தேசியத் தலைவர் இதை கவனிப்பார். உங்கள் உணர்வுகள் புண்பட்டது எங்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தமளிக்கிறது” என்றார்.
அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தீண்டாமை என்பது ஒரு பாவம். கட்சி அல்லது கொள்கை வேறுபாடின்றி நாம் அனைவரும் இதைக் கண்டிக்கிறோம். நாம் அனைவரும் தூய்மையானவர்களே. நம்மை சுத்திரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.