

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பிரபல ஊடகவியலாளர் நிதி ரஸ்தானை திருமணம் செய்துகொண்டார். தங்களது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருவருமே இத்தகவலை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, "நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியது" என்று பதிவிட்டு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக நிதி ரஸ்தான், It's done, bro என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் உமர் அப்துல்லாவின் தந்தை ஃபரூக் அப்துல்லா, தாய் மாலி, அவரது சகோதரிகள் மற்றும் நிதி ரஸ்தானின் பெற்றோர், மூத்த பத்திரிகையாளர் எம்.கே. ரஸ்தான், சர்லா ரஸ்தான் உள்ளிட்ட இருவீட்டாரின் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். விழாவில் உமர் அப்துல்லா நீல நிற பந்த்களா உடை அணிந்திருக்க, நிதி ரஸ்தான் சிவப்பு நிற ஆடையுடன் காட்சியளித்தார்.
56 வயதான உமர் அப்துல்லா 49 வயதான நிதி ரஸ்தான் இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். உமர் அப்துல்லாவுக்கு 1994-ல் பாயல் நாத் என்பவருடன் திருமணமானது; இவர்களுக்கு சாஹிர், சமீர் என்ற இரு மகன்கள் உள்ளனர். 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், பரஸ்பர சம்மதத்தின் பேரில் உச்ச நீதிமன்றம் இவர்களது விவாகரத்தை கடந்த ஜூலை மாதம் உறுதி செய்தது.
அதேபோல், நிதி ரஸ்தான் 2005-ல் பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நீலேஷ் மிஸ்ராவைத் திருமணம் செய்து, 2007-ல் விவாகரத்து பெற்றார். நீண்ட நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உமர் அப்துல்லா - நிதி ரஸ்தான் இருவரும் தற்போது தங்களது திருமண வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.