

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக விமானப்படை முன்னாள் அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடை மற்றும் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இதில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டு, அதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இதனிடையே, மீண்டும் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளைக்கு முழுநேர தலைமை செயல் அதிகாரியை நியமிக்க அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்தது. தலைமை செயல் அதிகாரி பதவிக்கு 5,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் 18 பேர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணுகாந்த் சதுர்வேதி, அணு விஞ்ஞானியான சுரேஷ் ஹவாரே ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இந்நிலையில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மிஸ்ரா, அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரியாக அன்றாட நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், நிதி ஏற்பாடுகள், பணியாளர் ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு மற்றும் பெரிய மத நிகழ்வுகளின் மேலாண்மை ஆகியவற்றை மேற்பார்வையிடுவார் என கூறப்பட்டுள்ளது.
யார் இந்த மிஸ்ரா?
மிஸ்ரா உத்தர பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விமானப்படையின் மேற்கு கட்டளை பிரிவின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றார். பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இவர் முக்கிய பங்கு வகித்ததும், அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு ‘சர்வோத்தம் யுத் சேவா’ பதக்கத்தை வழங்கி கவுரவித்ததும் குறிப்பிடத்தக்கது.