ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு: சிபிஐ விசாரணை கோரி 13-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

தேவேந்திர நாத் மஹ்தோ தொடர் உண்ணாவிரதம்
ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு: சிபிஐ விசாரணை கோரி 13-வது நாளாக மாணவர்கள் போராட்டம்
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிவு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாநில மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 13-வது நாளை எட்டியுள்ளது.

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிந்ததை அடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் தலைநகர் ராஞ்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 25-ம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா (ஜேஎல்கேஎம்) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ ஆகஸ்ட் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் கடந்த செவ்வாய்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், ‘ஏப்ரல் 19-ம் தேதி நடந்த ஜேபிஎஸ்சி 14-வது ஒருங்கிணைந்த முதன்மைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஓஎம்ஆர் விடைத்தாளில் 5-வதாக விடையளிக்கவில்லை “not attempted” என்றொரு வாய்ப்பை அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக தேவேந்திர நாத் மஹ்தோவின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகள் கணிசமாக குறைந்ததை அடுத்து அவரை தொடர்பு கொண்டு பேசிய லடாக்கைச் சேர்ந்த சோனம் வாங்சுக் (இவர் டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தின்போது உண்ணாவிரதம் இருந்த சமூக செயற்பாட்டாளர்), குறைந்தபட்சம் தண்ணீரையாவது குடிக்குமாறு வலியுறுத்தினார். இதை மஹ்தோ ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்தாலேசிக்கவும், உறுதியான தீர்வுகளை பரிந்துரைக்கவும் அமைச்சர்கள் குழுவை முதல்வர் ஹேமந்த் சோரன் அமைத்துள்ளார்.

இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மாணவர் ஒருவர், “நாங்கள் உணவு உண்பதை நிறுத்திவிட்டோம். மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். நாங்கள் எதுவும் சாப்பிடவில்லை; குடிக்கவில்லை. இதனால், எங்கள் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வருகிறது. எங்கள் கோரிக்கைகளை அரசு எப்போது கேட்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர் தலைவர் ராதே குமார் கூறுகையில், “வரும் 10-ம் தேதி சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அரசு அதிகாரிகள் சமீபத்தில் எங்களைச் சந்தித்துப் பேசினர். நாங்கள் அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளை தெரிவித்தோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், திட்டமிட்டபடி வரும் 10-ம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம்” எனத் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு: சிபிஐ விசாரணை கோரி 13-வது நாளாக மாணவர்கள் போராட்டம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் தருண் தேஜ்பால் குற்றவாளி: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in