

புதுடெல்லி: பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நோக்கில் 50-க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் வெளியுறவு அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் 10-ம் ஆண்டு சர்வதேச கீதை மகோத்சவம் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாள்தோறும் ஏராளமான பிரபலங்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டு 70 லட்சம் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கீதை மகோத்சவ கொண்டாட்டத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இந்திய வெளியுறவுத் துறை இணைந்துள்ளது.
இந்நிலையில், கீதை மகோத்சவம் நிகழ்ச்சிக்காக வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். அவர் தனது உரையில், "உலகின் வழிகாட்டியாக பகவத் கீதை திகழ்கிறது. இது நாடுகளுக்கும் மனிதர்களுக்கும் காலம் காலமாக உள் வலிமையையும் ஆன்மிக தெளிவையும் வழங்கி வருகிறது.
ஹரியானா அரசு, குருஷேத்ரா வளர்ச்சி வாரியம், மத்தியப் பிரதேச அரசு ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆண்டு இந்த கீதை மகோத்சவத்தை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வதற்கான பணிகளை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ளும் முதன்மை அமைப்பு என்ற வகையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பல்வேறு கண்டங்களிலும் கீதையின் அதிர்வுகளைப் பெருக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் கீதை கொண்டாட்டங்களில் பங்கேற்க வெளிநாட்டு அறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆன்மிக உரையாடல்கள் பரந்து விரிந்த முறையில் நடைபெறுவதை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. கீதை கொண்டாட்டங்கள் வெறும் கலச்சார ஒன்றுகூடல் அல்ல.
இதற்காக, வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியில் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சிகள் மூலம் உரையாடல்களும் கலாச்சார நிகழ்வுகளும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறுகின்றன. பகவான் கிருஷ்ணரின் போதனைகளையும், மனிதர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் பகவத் கீதையின் சக்தியையும் கவுரவிப்பதை நோக்கமாகக் கொண்டு அமைச்சகம் செயல்படுகிறது.
இத்தகைய நிகழ்ச்சிகள் பகிரப்பட்ட மதிப்புகளை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, தைரியத்துடனும் இரக்கத்துடனும் மனிதர்கள் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது. எல்லைகளைக் கடந்து சமூகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் கீதையின் நல்லிணக்கம் மற்றும் மீள்தன்மை உணர்வை பரப்ப அமைச்சகம் பாடுபடுகிறது. கீதையின் போதனைகள் மிகவும் சக்திவாய்ந்த, நோக்கம் உள்ள, அறிவார்ந்த உலகத்தை நோக்கி வழிநடத்தட்டும்" என தெரிவித்தார்.