புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சையத் கதிப்சாதே விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், ‘‘அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், நாங்கள் பொறுப்பான, நிலைத்தன்மைக்கான சக்தியாக செயல்பட்டு வருகிறோம்.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஸ்திரத்தன்மையின் நங்கூரமாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை நாங்கள் முடக்கவில்லை. அவ்வாறு முடக்கினால், அதை முறைப்படி நாங்கள் அறிவிப்போம். நாங்கள் பொறுப்பு மிக்கவர்கள்.
நீர்வழிப்பாதையை தடுக்கும் உடனடி நோக்கம் எதுவும் எங்களுக்கு இல்லை. மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஈரானின் இருப்பு மற்றும் பிராந்தியத்தில் அதன் தீவிர பங்கு காரணமாக கடல்சார் ஸ்திரத்தன்மைக்கு ஈரான் உத்தரவாதம் அளிக்கிறது.
சர்வதேச சட்டம் மற்றும் கடல் வழிக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஈரான் உறுதி பூண்டுள்ளது. அமெரிக்காதான் கடல்சார் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானில் அரசியல் தலைமை மாற்றம் நிகழ வேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதேநேரத்தில், அவரால் நியூயார்க் நகர மேயரைக் கூட நியமிக்க முடியாது. உள்நாட்டில் ஜனநாயகத்தை காண விரும்பும் அவர், ஈரானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை கவிழ்க்க விரும்புகிறார். இப்படிப்பட்ட காலனித்துவ அணுகுமுறையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
சர்வதேச சட்டம் மற்றும் விதிகளுக்கு மாறாக இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஈரான் எந்த அச்சுறுத்தலையும் அளிக்கவில்லை. ஈரான் அச்சுறுத்தலை அளிக்கிறது என்ற பொய்யான காரணத்தைக் கூறி அவர்கள் எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்கர்கள் எங்கிருந்தெல்லாம் எங்களை தாக்க திட்டமிடுகிறார்களோ அங்கெல்லாம் நாங்கள் அவர்களை தாக்குவோம். எங்களுக்கு வேறு வழி இல்லை’’ என தெரிவித்துள்ளார்.