ஜெய்சங்கர் | கோப்புப் படம்
புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை அனுமதித்ததால் ஈரான் பிரதிபலனாக எதையும் பெறவில்லை என்றும், நட்பின் அடிப்படையிலேயே இது நடந்தது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் ஃபினான்சியல் டைம்ஸ் (Financial Times) பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஜெய்சங்கர், ஈரானுடன் இந்தியா நடத்தி வரும் பேச்சுவார்த்தை குறித்தும் அதனால் கிடைத்துள்ள பலன்கள் குறித்தும் விவரித்துள்ளார். இந்தியாவின் இந்த அணுகுமுறை ஐரோப்பிய நாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
ஜெய்சங்கர் தனது பேட்டியில், ‘‘உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது என்பதால், இந்த பாதை மீண்டும் (பழையபடி) திறக்கப்படுவதற்காக ஈரானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை ஏற்கெனவே சில பலன்களைத் தரத் தொடங்கிவிட்டன.
நாம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்பை துண்டித்துக் கொள்வதைவிட, அவர்களுடன் பேசுவதும், புரிந்து கொள்வதும், ஒருங்கிணைந்து செயல்படுவதும் இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இதன்மூலம் ஒரு தீர்வைப் பெறுவதே இந்தியாவின் பார்வையில் சிறந்தது. பேச்சுவார்த்தை காரணமாக இந்திய கொடியேற்றிய சில எண்ணெய் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியாவுக்கு வந்துள்ளன. இன்னும் பல கப்பல்கள் அந்த ஜலசந்தியை கடக்க வேண்டியது உள்ளது.
அனைத்துக் கப்பல்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறையான ஏற்பாடு இன்னும் உருவாக்கப்படவில்லை. கப்பல்களின் போக்குவரத்து ஒவ்வொன்றும் தனித்தனியாக பரிசீலிக்கும் நடைமுறையே தற்போது பின்பற்றப்படுகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், இது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை அனுமதித்ததால் ஈரான் பிரதிபலனாக எதையும் பெறவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் நீண்ட காலமாக பழகி வந்த வரலாறு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறோம். இது ஒரு பண்டமாற்று விவகாரம் அல்ல. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு உறவு உள்ளது. மேலும், தற்போது நிலவும் இந்த மோதலை நாங்கள் மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்றாகவே கருதுகிறோம்.
ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவின் அணுகுமுறையைப் பின்பற்றிச் செயல்பட முடியுமா என்று கேட்கிறீர்கள். வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால், ஒவ்வொரு நாட்டின் உறவும் அதன் தனித்துவமான தகுதிகளின் அடிப்படையிலேயே அமைகிறது. எனவே, அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம். இருப்பினும், இந்தியாவின் அணுகுமுறையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே’’ என தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக இந்திய கொடியேற்றிய சிவாலிக், நந்தா தேவி ஆகிய இரண்டு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்தன. 92,712 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றிக் கொண்டு இந்த கப்பல்கள் இந்தியாவின் முந்த்ரா மற்றும் காண்ட்லா துறைமுகங்களுக்குச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.