

கோப்புப்படம்
புதுடெல்லி: கடந்த மாதம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர், ‘வேலியன்ட் ரோர்’ என்ற சரக்கு கப்பலை சர்வதேச கடல் பகுதியில் சிறைபிடித்தனர். அதில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் இருந்தனர்.
தற்போது ஈரான் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட 16 இந்தியர்களையும் விரைந்து மீட்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த மாலுமி (தலா ஒருவர்) இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
என்ன நடந்தது? - கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வேலியன்ட் ரோர்’ சரக்கு கப்பல் டிப்பா துறைமுகத்துக்கு அருகே உள்ள சர்வதேச கடல் எல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர், அந்த சரக்கு கப்பலை விரட்டி வந்து, துப்பாக்கி சூடு நடத்தி சிறைபிடித்துள்ளனர். மேலும், அந்த கப்பலை ஈரானில் உள்ள பந்தர்-இ-ஜாஸ்க் துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதை மாலுமிகளின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
சரக்கு கப்பலில் ஆறு மில்லியன் லிட்டர் டீசல் கடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் குற்றச்சாட்டு வைத்தது. ஆனால், அந்த சரக்கு கப்பலில் சல்பர் திரவம் மட்டுமே இருந்ததாக தகவல்.
சரக்கு கப்பல் மற்றும் மாலுமிகளை சிறை பிடித்தது குறித்து இதுவரை எந்தவொரு முறையான உத்தரவையும் வெளியிடவில்லை என மாலுமிகள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கப்பலில் இருந்த 18 மாலுமிகளில் 10 பேரை கைது செய்து பந்தர் அப்பாஸ் சிறையில் ஈரான் ராணுவம் அடைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல். மேலும், ஈரானில் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 16 இந்திய மாலுமிகளையும் விரைந்து மீட்க வேண்டும் என அவர்கள் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈரான் மக்கள் போராட்டம்: ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், போராட்டக்காரர்கள் தரப்பில் 2,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.