ராமர் கோயில் காணிக்கை திருட்டு - விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க காங். வலியுறுத்தல்

அயோத்தி ராமர் கோயில் |கோப்புப் படம்

அயோத்தி ராமர் கோயில் |கோப்புப் படம்

Updated on: 
3 min read

புது டெல்லி: ‘ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் விசாரணை வரம்பு வெறும் எட்டு ஊழியர்களுக்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், நேரடியாக நீதிமன்றத்திற்கே அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலான ஒரு சுதந்திரமான விசாரணை வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 74,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றப்பத்திரிகையில் திருட்டுகள் குறித்த முழுமையான விவரங்கள் இடம்பெற்றுள்ளனவா, அல்லது எட்டு ஊழியர்களை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டி, முக்கியப் புள்ளிகளைப் பாதுகாத்து, முக்கியமான கேள்விகளைத் தவிர்த்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது?

குற்றப்பத்திரிகையின்படி, 2026-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி இரவு, காணிக்கை திருட்டு தொடர்பான காணொளி ஒன்று வாட்ஸ்அப் வழியாக சம்பத் ராயைச் சென்றடைந்தது. அந்தக் காணொளியில், குளியலறையில் வைக்கப்பட்டிருந்த 2,25,000 ரூபாய் ரொக்கப் பணம் கட்டுகளாகக் காணப்பட்டது. அதனுடன் வந்த செய்தியில், பல நாட்களாகவே திருட்டுகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜூன் 5-ம் தேதி, சம்பத் ராயின் இல்லத்தில் வைத்து, அனில் மிஷ்ரா, கோபால் ஜி மற்றும் நரேந்திர ஜி ஆகியோர் அந்தக் காணொளியைப் பார்த்தனர். அதாவது, திருட்டு நடந்ததற்கான ஆதாரம் அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளை முன்பே சென்றடைந்துவிட்டது.

இருப்பினும், ஜூன் 25-ம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காணொளி கிடைத்த பிறகு, 21 நாட்களாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? இந்தத் தாமதத்திற்கு யார் பொறுப்பு?

நிகழ்வுகளின் தேதிகள், இந்தச் சூழலையும் எழுப்பப்படும் கேள்விகளையும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன:

ஜூன் 4: சம்பத் ராய்க்குத் திருட்டு தொடர்பான காணொளி கிடைக்கிறது.

ஜூன் 5: அவரது இல்லத்தில் அந்தக் காணொளி பார்க்கப்படுகிறது.

ஜூன் 13: மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கிறது.

ஜூன் 16 முதல் 18 வரை: மூன்று வெவ்வேறு நபர்கள் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர்.

ஜூன் 23: சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஆரம்பகட்ட அறிக்கையில் எட்டுப் பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன.

ஜூன் 25: 21 நாட்களுக்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கைகள் தொடங்குகின்றன.

இந்த 21 நாட்களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகவோ அல்லது ஓடிவிடவோ இல்லை. தங்களுக்கு ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததா? அப்படியென்றால், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது?

குற்றப்பத்திரிகையின்படி, பிடிபட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் திருடிய பணம் மற்றும் நகைகளைச் சம்பத் ராய், கோவிந்த் ஜி மற்றும் அறக்கட்டளை ஊழியர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர். இவ்வளவு இருந்தும், சம்பத் ராய், அனில் மிஷ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படாமல், சாட்சிகளாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகையில் அவர்கள் முறையே 18, 17 மற்றும் 19 ஆகிய வரிசை எண்களைக் கொண்ட சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

யார் குற்றம் சாட்டப்பட்டவர், யார் சாட்சி என்பது முக்கியமல்ல. திருட்டு குறித்த ஆதாரங்கள் சென்றடைந்த உயர் நிர்வாகிகள், மற்றும் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டபோது உடனிருந்த நிர்வாகிகள், எந்த அளவுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதே கேள்வி.

நிலப் பரிவர்த்தனைகள் குறித்த கேள்விகளும் புதியவை அல்ல. 2021-ல், ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம், வெறும் 10 நிமிடங்களுக்குப் பிறகு அறக்கட்டளைக்கு ரூ.18.5 கோடிக்கு விற்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அறக்கட்டளை சார்பாக சம்பத் ராய் இந்த நிலத்தை வாங்கினார்; இந்த ஒப்பந்தத்திற்கு அனில் மிஸ்ரா சாட்சியாக இருந்தார்.

சாட்சியாக இருந்தார் என்றால், அவர் அந்த நிகழ்வுகள் அனைத்தின்போதும் நேரில் இருந்திருக்கிறார், அந்தச் செயல்பாட்டில் பங்கேற்றிருக்கிறார் என்றுதானே அர்த்தம். அப்போது, ​​உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸும் கோரியிருந்தது.

2021 டிசம்பரில், பிரியங்கா காந்தி மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை வலியுறுத்தியதுடன், அரசாங்கம் நடத்திய விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கினார். அரசாங்கம் ஒரு விசாரணை குழுவை அமைத்தது, ஆனால் அதன் அறிக்கை இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. ஏன்?

2026 ஜூலையில், நிலப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், சம்பத் ராயிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அப்படியென்றால், இந்த நிலப் பரிவர்த்தனைகள் குறித்து குற்றப்பத்திரிகையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? விசாரணை தொடங்கியது, ஆனால் அதன் முடிவு என்ன?

குற்றப்பத்திரிகையில் 304 முறை திருட்டு நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், சிசிடிவி காட்சிகளில் உள்ள நேர முத்திரைகள் மற்றும் விசாரணை குறித்த முழுமையான காலவரிசை ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை? இந்த விசாரணை எந்தக் காலக்கட்டத்தைச் சேர்ந்த காட்சிகளை உள்ளடக்கியது? விசாரணையின் வரம்பு ஏன் வெறும் எட்டு ஊழியர்களுக்குள் மட்டுமே சுருக்கப்பட்டது?

முழு உண்மையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். பாஜக அரசாங்கம் பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்:

1. திருட்டு தொடர்பான காணொளி ஜூன் 4-ம் தேதியே கிடைத்து, ஜூன் 5-ம் தேதியே பார்க்கப்பட்டிருந்தும், ஜூன் 25-ம் தேதி வரை ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை?

2. ரூ.200 கோடிக்கும் அதிகமான தொகை முறைகேடு செய்யப்பட்டதாகச் சந்தோஷ் துபே அளித்த புகாரின் பேரில் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை?

3. 2021-ல் நடந்த நிலப் பரிவர்த்தனைகளை விசாரித்த குழுவின் அறிக்கை எங்கே? இது ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை?

4. 304 முறை நடந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்த தேதி வாரியான சிசிடிவி காலவரிசையும், விசாரணை குறித்த முழு விவரங்களும் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை?

5. அறக்கட்டளையின் உயர் நிர்வாகிகள் மீதான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து யார் முடிவு செய்தது?

திருட்டுச் சான்றுகளைப் பெறுவது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது மற்றும் விசாரணை நடைமுறை என அனைத்திலும் இத்தனை கேள்விகள் எழும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் ஒரு சுதந்திரமான விசாரணை தேவைப்படுகிறதா?

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், நேரடியாக நீதிமன்றத்திற்கே அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலான ஒரு சுதந்திரமான விசாரணையை காங்கிரஸ் கோருகிறது. இந்த விசாரணையின் வரம்பு வெறும் எட்டு ஊழியர்களுக்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்பான பதவிகளில் உள்ள ஒவ்வொரு நபரின் பங்களிப்பும் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

ராமர் கோயில் என்பது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் அடையாளமாகும். ராமர் பெயரில் காணிக்கையாக வழங்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டப்பட வேண்டும். பொறுப்புக்கூறலில் இருந்து யாரும் தப்பிக்க அனுமதிக்கப்படக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அயோத்தி ராமர் கோயில்&nbsp;|கோப்புப் படம்</p></div>
‘இந்தியாவுக்கு தேவை வெளிநாட்டு மூலதனமே; வெளிப்படையற்ற நிதி அல்ல’ - காங்கிரஸ்

X