

புதுடெல்லி: நேபாளத்தில் மாயமான இந்தியர்களை கண்டுபிடிக்கவும் அவர்களை பத்திரமாக மீட்டு வரவும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
நேபாளத்தில் திபெத் எல்லையையொட்டி உள்ள பல மாவட்டங்களை கடந்த புதன்கிழமை பெருவெள்ளம் தாக்கியது. இதில், இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் மாயமாகினர். 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், 288 பேர் மாயமானதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும், வெள்ளம் பாதித்த பகுதியில் சிக்கி தவித்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. தமிழ்நாட்டை சேர்ந்த அந்த 21 பேரும் நேற்று டெல்லி வந்தடைந்தனர். இதனிடையே, திரிசூலி 1 மின் திட்டத்தில் பணியாற்றி வந்தபோது வெள்ளத்தில் சிக்கிய 63 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், நேபாளத்தில் மாயமான இந்தியர்களை கண்டுபிடிக்கவும் அவர்களை பத்திரமாக மீட்டு வரவும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,”காணாமல் போன சுற்றுலாப் பயணிகளைக் கண்டறிய இந்திய தூதரகம் நேபாள ராணுவம் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நேபாள ராணுவத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். காணாமல் போன இந்தியர்களைப் பற்றி எங்களிடம் உள்ள தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து வருகிறோம்” என தெரிவித்தார்.