குவஹாட்டி: ஊடுருவல்காரர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவர்கள் ஒவ்வொருவரும் வெளியேற்றப்படுவார்கள் என உறுதிபட தெரிவித்தார்.
அசாம் தலைநகர் குவஹாட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, ‘‘வட கிழக்கு முழுவதும் பக்தி, ஒழுக்கம், மனிதநேயத்தின் உயர் மதிப்புகளை நிலைநாட்டியவர் ஸ்ரீமந்தா சங்கர் தேவ். கலியுகம் பாக்கியம் நிறைந்தது; மனிதப் பிறப்பு பாக்கியம் நிறைந்தது; பாரதத்தில் பிறப்பது பாக்கியம் நிறைந்தது என்று 500 ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர் அவர். இதன்மூலம் ஒரே இந்தியா என்ற செய்தியை அவர் அன்று வழங்கினார். இன்று, பிரதமர் நரேந்திர மோடி அதை முன்னெடுத்துச் செல்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களை பல ஆண்டுகளாகப் பாதுகாத்தது. 1983-ம் ஆண்டு ஐஎம்டிடி என்ற சட்டத்தின் மூலம் அவர்கள் குடியுரிமைபெற வழி வகுத்தனர். அசாமில் இருந்து மட்டுமல்ல, நாடு முழுவதிலும் இருந்து ஊடுருவல்காரர்களை கண்டறிந்து வெளியேற்ற நாங்கள் பாடுபடுவோம் என்று இந்த புனித பூமியில் இருந்து நான் உறுதி அளிக்கிறேன்.
அசாமில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அசாமுக்கு ஏழு முறை மட்டுமே வருகை தந்தார். அவற்றில், இரண்டு முறை வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்தார். ஆனால், வட கிழக்கு மாநிலங்களுக்கு அடிக்கடி வருகை தருபவர் பிரதமர் மோடி.
வட கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இன்று அசாம் வளர்ந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக அசாமில் பாஜகவின் ஆட்சி இருப்பதுதான் இதற்குக் காரணம். அசாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அசாம் மக்கள் மீண்டும் பாஜகவை ஆதரிக்க வேண்டும். முழு அசாமையும் ஊடுருவல்காரர்களிடம் இருந்து நாங்கள் விடுவிப்போம். ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாகக் கருதும் காங்கிரஸ் கட்சி இதை ஒருபோதும் செய்யாது.
ஊடுருவல்காரர்கள் அசாமின் கலாச்சாரத்துக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதை நம்புபவர்கள் மட்டுமே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இதை நம்பும் ஒரே கட்சி பாஜகதான்.
கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் ஊடுருவல்காரர்களிடம் இருந்து 1,29,000 பிகா நிலங்கள் (1 பிகா=0.33 ஏக்கர்) விடுவிக்கப்பட்டுள்ளன. அசாமில் உள்ள அனைத்து போராளிக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தை மூலம் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளனர்’’ என தெரிவித்தார்.