இந்தூரில் அசுத்தமான குடிநீரை பருகிய 10 பேர் உயிரிழப்பு: 100 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்தூரில் அசுத்தமான குடிநீரை பருகிய 10 பேர் உயிரிழப்பு: 100 பேர் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கடந்த சில நாட்களாக விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்ததே இந்த பாதிப்பிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டதால், கழிவு நீர் குடிநீருடன் கலந்துள்ளது. இந்தத் தண்ணீரைக் குடித்த பலருக்குக் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் 6 மாதக் குழந்தையும், 6 பெண்களும் அடங்குவர்.

தற்போது அந்தப் பகுதியில் சுமார் 2,700 வீடுகளில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பணியில் அலட்சியமாக இருந்த ஒரு துணைப் பொறியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இரண்டு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் இந்தூரில், இத்தகைய சுகாதாரச் சீர்கேடு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை அந்தப் பகுதிக்குத் தூய்மையான குடிநீர் லாரிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தூரில் அசுத்தமான குடிநீரை பருகிய 10 பேர் உயிரிழப்பு: 100 பேர் மருத்துவமனையில் அனுமதி
உத்தர பிரதேசத்தில் ஒரே ஆண்டில் 48 குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in