

புதுடெல்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்திய சிம் கார்டுகளை வாங்கி அனுப்பியது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதியை காவல் துறை சிறப்புப் பிரிவு நேற்று கைது செய்தது.
இது குறித்து டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் துணை ஆணையர் நர்ரா சைதன்யா கூறியதாவது: தெற்கு தில்லியின் சாராய் காலே கான் பகுதியைச் சேர்ந்த முகமது சாஹில் (25), அவரது மனைவி சமீரா (21) இளம் தம்பதி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கைபேசிகளில் பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் நடத்திய உரையாடல்களுக்கான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இந்தியப் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரிப்பதற்காக, இந்தியச் சிம் கார்டுகளைப் பெற்று துபாய் வழியாகப் பாகிஸ்தானுக்கு இந்தத் தம்பதி அனுப்பி வைத்துள்ளனர். இந்த இந்திய எண்களைக் கொண்டு பாகிஸ்தானில் இருந்த படியே வாட்ஸ்அப் கணக்குகளைத் தொடங்கி, இந்திய வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து பாகிஸ்தான் உளவு அமைப்பினர் தகவல்களைச் சேகரித்து வந்துள்ளனர்.
இந்திய ராணுவப் படை முகாம்களை நோட்டமிடுவது, ஒழுங்கு நடவடிக்கை எதிர்கொள்ளும் ராணுவ வீரர்களின் விவரங்களைச் சேகரிப்பது மற்றும் இந்தியாவிற்குள் ஆட்களைச் சேர்ப்பது தொடர்பான பணிகள் இந்தத் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சாஹிலும் அவரது மனைவி சமீராவும் இன்ஸ்டாகிராம் தளத்தில் பாகிஸ்தான் முகவர் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அந்த முகவர் மூலம் பாகிஸ்தான் உளவு அதிகாரியின் அறிமுகம் கிடைத்துள்ளது. பண ஆசை காட்டி தம்பதியைத் தங்கள் வலையில் வீழ்த்திய உளவு அமைப்பினர், டெல்லியில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதற்கான உதவியாளர்களைச் சேர்க்கப் பணித்துள்ளனர்.
கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் 8 இந்தியச் சிம் கார்டுகளை துபாய் வழியாகப் பாகிஸ்தானுக்கு அனுப்பியதற்காக இத்தம்பதிக்கு ரூ.30,000 பணம் கைமாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அத்தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியப் பாதுகாப்பு தொடர்பான பெரிய உளவுச் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சைதன்யா கூறினார்.