

சூரத்: மாலியில் கடத்தப்பட்ட 75 வயது இந்திய வம்சாவளி வைர வியாபாரியை, அவரது குடும்பத்தினர் ரூ.44 கோடி பிணயத் தொகை செலுத்தி மீட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் தார் கிராமத்தைச் சேர்ந்தவர் தீரு ரமணி (75). அவர் 1980 முதல் வைர தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு அவரது குடும்பத்தினர் வைர வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தை சமீபத்தில் கையகப்படுத்திய ரமணி, சில மாதங்களாக அங்கு வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவர் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார்.
பின்னர் அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தினரை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள், ரமணியை விடுவிக்க சுமார் 100 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.44 கோடி கொடுத்து அவரை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட ரமணி, இன்னும் மாலியில்தான் இருக்கிறார். உள்ளூர் காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.