இந்தியா - அமெரிக்கா இடையிலான 2 நாள் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா - அமெரிக்கா இடையிலான 2 நாள் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவு
Updated on
2 min read

புதுடெல்லி: இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோருக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே கடந்த 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்வதற்கான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இதன் பேரில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய குழுவுடன், ஜேமிசன் கிரீர் தலைமையிலான அமெரிக்கக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து, இது குறித்து பியூஷ் கோயல் திருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மற்றும் அவரது குழுவினருடனான தொடர் சந்திப்புகள் இன்று காலை நிறைவடைந்தன. இந்தியா - அமெரிக்கா இடையிலான தற்போதைய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். அத்துடன் இரு நாடுகளின் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஜேமிசன் கிரீரின் தலைமையையும், இரு தரப்பு குழுக்களின் தொடர் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை முடிவடைந்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், “அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது. பல ஆண்டுகளாக அவர்கள் இந்த உறவை வளர்த்தெடுத்துள்ளனர். கடந்த வாரம் பிரான்சின் எவியன் நகரில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டின்போது அவர்கள் சந்தித்தனர். அப்போது நானும் அங்கு இருந்தேன். அப்போது இந்த உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதில், நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தமும் அடங்கும். ஒவ்வொரு வாரமும் இந்த உறவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து மேலும் உயர்ந்த நிலையை அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்தியா நீண்ட வரலாற்றைக்கொண்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். அதேவேளையில், தொழில்நுட்பத் துறையிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். அவர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னேற விரும்புகிறார்கள். எதிர்காலத் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுடன்இணைந்து செயல்படவும் ஒத்துழைப்பை அளிக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் உற்சாகமளிக்கும் விஷயமாக இருக்கும்” என தெரிவித்தார்.

2025-26ம் நிதி ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா திகழ்ந்தது. கடந்த நிதி ஆண்டில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுதி 0.92 சதவீதம் அதிகரித்து 87.3 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதேநேரத்தில், இறக்குமதி 15.95 சதவீதம் அதிகரித்து 52.9 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தக உபரி 2024-25ம் நிதி ஆண்டில் 40.89 பில்லியன் டாலராக இருந்த நிலயில் அது 2025-26ல் 34.4 பில்லியன் டாலராக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான 2 நாள் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவு
சீக்கிய மதகுருவை அவமதித்ததாக குற்றச்சாட்டு: பகவந்த் மானை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in