

புதுடெல்லி: மனிதாபிமான உதவியாக ஆப்கானிஸ்தானுக்கு 5 டன் அத்தியாவசிய மருந்துகளை இந்தியா நேற்று வழங்கியது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மனிதாபிமான உதவி மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களின் நல்வாழ்வுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா மேலும் 5 டன் அத்தியாவசிய மருந்துகளை காபூலுக்கு வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 11ம் தேதி, ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளியுறவுத் துறை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது. ஆப்கானிஸ்தான் மருத்துவத் துறையினருக்கு நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் சிறப்புப் பராமரிப்புக்கான மருத்துவ உபகரணங்களைப் பரிசாக வழங்குவதாகவும் அறிவித்தது. இதில் பச்சிளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு சாதனங்கள், கார்டியோகிராஃப் இயந்திரம், வென்டிலேட்டர்கள் மற்றும் சிறப்பு மருத்துவக் கருவிகள் அடங்கும்.