லோவி இன்ஸ்டிடியூட்டின் சக்தி வாய்ந்த நாடுகள் தரவரிசையில் இந்தியாவுக்கு 3-வது இடம்

சக்திவாய்ந்த பிராந்திய தலைவராக மோடி தேர்வு
லோவி இன்ஸ்டிடியூட்டின் சக்தி வாய்ந்த நாடுகள் தரவரிசையில் இந்தியாவுக்கு 3-வது இடம்
Updated on: 
2 min read

புதுடெல்லி: லோவி இன்ஸ்டிடியூட்டின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லோவி இன்டிடியூட் எனும் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2018 முதல் பல்வேறு அம்சங்களில் நாடுகளின் தரநிலைகளை பட்டியல் இட்டு வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனம் 2026-ல் ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்த தர நிலையை வெளியிட்டுள்ளது. இதில், ஆசிய பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அதிகாரம் மற்றும் செல்வாக்கை 131 அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது.

அதோடு, ஆசிய பிராந்தியத்தில் அதிக செல்வாக்கைக் கொண்டிருக்கும் ஆசியாவைச் சாராத நாடுகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆசியாவின் மூன்றாவது சக்தி வாய்ந்த நாடாக இந்தியா தனது இடத்தை உறுதிப்படுத்தி இருப்பதோடு, இப்பிராந்தியத்தின் முக்கிய வல்லரசாக உருவெடுத்துள்ளது. ஆசியாவில் சக்திவாய்ந்த நாடாக 78.9 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா ஆசிய கண்டத்தில் இல்லை என்ற போதிலும், இந்த பிராந்தியத்தில் அதிக செல்வாக்கு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

73.6 புள்ளிகளுடன் சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 40.5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி தற்போது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அடுத்தபடியாக மிகவும் திறமையான பிராந்தியத் தலைவர்களில் ஒருவராக பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். இது இந்தியாவின் ராஜதந்திர செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா தனது கலாச்சார செல்வாக்கில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இதில் இந்த ஆண்டில் 2.3 புள்ளிகள் அதிகரித்துள்ளன. மேலும், பாதுகாப்பு வலைப்பின்னல்களில் 2.1 புள்ளிகளும், எதிர்கால வளங்களில் 1.2 புள்ளிகளும், ராணுவத் திறனில் 0.5 புள்ளிகளும் கூடுதல் முன்னேற்றம் கண்டுள்ளது.

அதேநேரத்தில், இந்தியாவின் பொருளாதார திறன் மதிப்பீடு 0.7 புள்ளிகள் சரிந்துள்ளன. தாங்கும் சக்தி, பொருளாதார உறவுகள், ராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றுக்கான புள்ளிகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த தரவரிசையின்படி இந்தியா பொருளாதார திறனில் 26.4 புள்ளிகளையும், கலாச்சார செல்வாக்கில் 43.8 புள்ளிகளையும், ராஜதந்திர செல்வாக்கில் 70.3 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

இந்தியாவின் தரவரிசை முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “லோவி இன்ஸ்டிடியூட் மட்டுமல்ல, பல உலகளாவிய தரவரிசை அமைப்புகளும் பொருளாதாரம், ராணுவம், நிதித்துறைகளில் இந்தியாவுக்கு மிக உயர்ந்த இடங்களை வழங்கி உள்ளன.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு உலகளாவிய தரவரிசையில் இந்தியா மிகக் கீழான நிலையில் இருந்தது. இன்று நாம் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களுக்குள் இருக்கிறோம். இந்தியா இப்போது மாறிவிட்டது. நமது தலைமை வலிமையானது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

லோவி இன்ஸ்டிடியூட்டின் சக்தி வாய்ந்த நாடுகள் தரவரிசையில் இந்தியாவுக்கு 3-வது இடம்
‘பாஷிம் பங்கா’ ஆகிறது மேற்கு வங்கம்: முதல்வர் சுவேந்து அதிகாரி தகவல்

X