

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: “தீவிரவாதத்துக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது,” என்று தனியார் தொலைகாட்சி நிறுவனம் நடத்திய நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்குள் செல்வதை தடுத்து திசை திருப்பும் இந்தியாவின் செயல் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ராஜ்நாத் சிங் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
“இந்தியா அமைதியை விரும்புகிறது. ஒருபோதும் போரை விரும்பவில்லை. உலகில் எந்தவொரு வெளிநாட்டின் நிலப்பகுதியையும் இந்தியா கைப்பற்ற விரும்பவில்லை. இந்தியா யாரையும் அச்சுறுத்த கூட விரும்பவில்லை.
இருப்பினும் இந்திய தேசம் அதன் பாதுகாப்பினை எந்தவொரு சூழலிலும் விட்டுக்கொடுக்காது. இந்தியா பேச்சுவார்த்தையை நம்புகிறது. ஆனால், எந்தவொரு நாடும் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் அத்துடன் பேச்சுவார்த்தை என்பது முடிவுக்கு வருகிறது. இது குறித்து எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தி உள்ளார்.
அண்டை நாடுகள் தீவிரவாதத்தை அரசு கொள்கையாக தொடரும் வரை, தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியா தயாராக உள்ளது. இதை நாங்கள் அண்டை நாட்டுக்கும், உலகுக்கும் தெவித்துக் கொள்கிறோம். இந்தியா அந்த நடவடிக்கைக்கு தயாராக உள்ளது” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.