

பிஸ்வநாத்: "இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தான். அசாமின் நிலத்தை அம்பானி, அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரிடம் அவர் ஒப்படைத்துவிட்டார்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலம் பிஸ்வநாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "உங்கள் முதல்வர் 24 மணி நேரமும் அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார். உயிரிழந்த பாடகர் ஜுபீன் கார்க் தனது வாழ்நாள் முழுவதையும் அசாமிற்காக அர்ப்பணித்துள்ளார். அவர் யாரிடமும் ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதில்லை. உங்கள் முக்கியத் தலைவர்கள் அசாமைப் பிளவுபடுத்த ஒருபோதும் முயன்றதில்லை; அவர்கள் வெறுப்பைப் பரப்ப ஒருபோதும் முயன்றதில்லை.
ஆனால், உங்கள் முதல்வர் தொடர்ந்து மாநிலத்தைப் பிளவுபடுத்தவும் வெறுப்பைப் பரப்பவும் முயற்சிக்கிறார். அவர் அபத்தமான கருத்துக்களைக் கூறுகிறார். அவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் என்பதால் இதைச் செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் சிங்கங்கள் அவரைச் சிறையில் தள்ளுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஹிமந்த சர்மா இறுதியில் அசாம் மக்களிடமும், காங்கிரஸ் தலைவர்களிடமும் மன்னிப்புக் கேட்கும் சூழல் வரும். நேரம் வரும்போது மக்கள் அவரை விட்டுவைக்க மாட்டார்கள்.
டெல்லியில் உள்ள ஹிமந்த சர்மாவின் வர்த்தக கூட்டாளிகளான அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி, அவரை தங்களின் தனிப்பட்ட ஏடிஎம் ஆக மாற்றிவிட்டனர். அசாமின் நிலம் இப்போது அம்பானி, அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரிடம் ஹிமந்த சர்மாவால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் இந்த நிலத்தை இலவசமாக வழங்கவில்லை; அதற்கு ஈடாக, அந்த நபர்கள் அவருக்கு ஆதாயத்தை வழங்குகிறார்கள். ட்ரம்ப் ஒரு ட்வீட்டை வெளியிட்டால் போதும், மோடி நடுங்கத் தொடங்குகிறார்” என்று அவர் கூறினார்.