

புதுடெல்லி: கடல் முதல் வானம் வரை இந்தியா அதிக அளவில் பாதுகாப்பாகவும், தற்சார்பு உடையதாகவும் ஆகி வருகிறது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முழு தொகுப்பு: மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தில் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.
ஜூன் மாதத்திலே தான் விமானத்துறையிலேயும் கூட, தேசம் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. சி-295 என்ற இந்த விமானம் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. மேலும், இந்த சி-295 விமானம் தனது முதல் வான் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. இப்படி 40 விமானங்கள் பாரதத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சிறுகுறுநடுத்தரத் தொழில்துறை மற்றும் வான்வெளித்துறைக்கு புதிய சக்தி கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதோடு கூடவே, தற்சார்பு பாரதம் என்ற உள உறுதிப்பாடும் உறுதிப்பட்டுக்கொண்டு வருகிறது.
இந்த மாதம் தான், டிஆர்டிஓ நிறுவனம், உள்நாட்டுத் தயாரிப்பான நீண்டதூர தரைத்தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனையை நிறைவு செய்திருக்கிறது. இதனை டிஆர்டிஓவின் பரிசோதனைக்கூடங்களும், இந்திய தொழில்துறைக் கூட்டாளிகளும் இணைந்து உருவாக்கி இருக்கின்றார்கள். அதாவது, இன்று கடல் தொடங்கி, வானம் வரை பாரதம் அதிக அளவிலே பாதுகாப்பாகவும், தற்சார்பு உடையதாகவும் ஆகி வருகிறது.
ஜூன் மாதத்திலே நடந்த ஒரு நிகழ்ச்சியிலே, ஒட்டுமொத்த உலகின் முயற்சிகளும் பாரதத்தோடு இணைந்தது; இந்த நிகழ்ச்சி தான் சர்வதேச யோகா தினம். இந்த முறை உலகின் 2500க்கும் மேற்பட்ட இடங்களிலே யோகக்கலையோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நமது தேசத்திலே கோடிக்கணக்கான மக்கள், பல இடங்களில் யோகக்கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
இந்த மாதம் தான், அஹமதாபாதில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக யோகாசன சேம்பியன்ஷிப் கூட பெரிய அளவில் விவாதப்பொருளானது. இதிலே பாரதம் மொத்தமாக 114 பதக்கங்களை வென்றிருக்கிறது. இதிலே 102 தங்கப் பதக்கங்களும் அடங்கும். பாரதம் இந்தப் போட்டியின் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. நான் வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம். அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது. தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்திதான், பாரதத்தின் மிகப்பெரிய மூலதனம், இந்த மக்கள் பங்களிப்பினை நாம் மீண்டும் மீண்டும் அனுபவித்து வருகிறோம்.
மேற்கு ஆசியாவிலே மூண்டிருக்கும் போரைக் காணும் போது, நான் நாட்டுமக்களிடம் சில வேண்டுகோள்களை விடுத்தேன். எத்தனை முடியுமோ, சிலகாலம் வரை தங்கம் வாங்குவதைத் தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அயல்நாடுகளுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதைத் தவிருங்கள், குழுவாகக் கார்களில் பயணிக்கும் கார் பூலிங் முறைக்கும் ஊக்கமளியுங்கள், இரசாயனம் இல்லா விவசாயத்தை மேற்கொள்ளுங்கள், நிலத்தைக் காக்கவும், இயற்கை உரங்களை அதிக அளவில் பயன்படுத்துங்கள் என்று விவசாயிகளிடம் கேட்டு கொண்டேன். என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, அவர்கள் இதற்கு ஆதரவு அளித்ததோடு மட்டுமல்லாமல், இதிலே தங்களுடைய ஒத்துழைப்பையும் கூட அளித்திருக்கிறார்கள் என்பதற்கு நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
பல குடும்பங்கள் எனக்குச் செய்திகள் அனுப்பித் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்தும் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை இல்லத்திருமணங்களிலே தங்கம் வாங்கப் போவதில்லை என்றும் எவ்வளவோ குடும்பங்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். தேவை வருமானால் பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து புதிய நகைகளை உருவாக்குவோம் என்று தீர்மானித்தார்கள். இந்த முறை அயல்நாட்டுப்பயணத்தை ஒத்திப் போட்டதாக எத்தனையோ பேர், சமூக வலைத்தளங்களிலும் கூட பதிவு செய்திருந்தார்கள்.
கார் பூலிங் தொடர்பாக, அதாவது ஒரு காரிலே, ஒரே இடம் செல்வோர் பலர் ஒன்றாகப் பயணிப்பது தொடர்பாகவும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். யாரெல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் ஒரே திசையிலே செல்கிறார்களோ, அவர்கள் இப்போது ஒன்றாகப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் முடிந்தவரை பேருந்து அல்லது மெட்ரோவினைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்படுகிறது.
இதைப் போலவே, தேசத்தின் பல்வேறு பாகங்களில் இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிப்பது தொடர்பான செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. உலக அளவிலான இந்தச் சங்கடத்தை பாரதநாட்டவர் நாமனைவரும் இணைந்து எதிர்கொண்டு வருகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்கள் பங்களிப்பின் இந்தச் சக்தி நமக்கு பலத்தை அளிக்கும், வெற்றியை உரித்தாக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நமது தேசத்திலே பிறந்தநாள், திருமணம் போன்றவை குடும்ப நிகழ்ச்சிகளாக இருப்பதோடு கூடவே, ஒட்டுமொத்த சமூகத்தின் கொண்டாட்டங்களாகவும் ஆகின்றன. ஒவ்வொரு குடும்பமுமே, அதன் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர வேண்டும் என்றே விரும்புகிறது. மக்கள் விருந்தாளிகளுக்குப் பரிசுகளையும் அளிக்கிறார்கள். மகாராஷ்டிரத்தின் நாந்தேடில் ஒரு குடும்பம் தனது சந்தோஷங்களைப் பகிரும் வகையில் செய்த செயல் இப்போது விவாதப்பொருளாகி இருக்கிறது. இங்கே நாந்தேடின் பஹாதுர்புரா கிராமத்திலே பேட்கர் குடும்பம் வசித்து வருகிறது. சந்தோஷங்களைப் பகிர வேண்டுமென்றால், சங்கட வேளையிலே எந்த ஒரு குடும்பத்துக்கும் கைகொடுப்பதாக இருக்கக்கூடிய ஒரு பொருளை நாம் அளிக்க வேண்டும் என்று இந்தக் குடும்பம் சிந்தித்தது.
தங்கள் இல்லத் திருமண விழாவிலே இந்தக் குடும்பம் கிராமத்தின் கிட்டத்தட்ட 3,500 மக்களுக்கு விபத்துக்காப்பீட்டிற்கான ஏற்பாட்டினைச் செய்தது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீட்டினை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த முன்னெடுப்பின் பின்புலத்தில் இருந்த உணர்வு உள்ளத்தைத் தொடும் வகையில் இருந்தது. விபத்திற்குப் பிறகு குடும்பங்கள் பொருளாதாரச் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதை இந்தக் குடும்பத்தார் கவனித்தார்கள். இத்தகைய வேளையிலே ஒரு சின்னச்சிறிய உதவிகூட, பேராறுதலாக ஆகிறது.
தேசத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு அரசு பாதுகாப்புக் கவசத்தைக் கொண்டு சேர்த்து வருகிறது. பிரதம மந்திரி விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, வருடந்தோறும் 20 ரூபாய் பிரீமியம் அதாவது ஆண்டொன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே பிரீமியம் தொகை செலுத்துவதன் வாயிலாக, இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலான விபத்துக்காப்பீட்டினை உறுதி செய்கிறது. இதுவரை இந்தத் திட்டத்திலே 58 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 28 கோடிக்கும் மேற்பட்டோர் தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள். இந்தத் திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் உதவித்தொகை 3,700 கோடி ரூபாய்க்கும் அதிகமானது.
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டுத் திட்டமும் இதைப் போலவே முக்கியமானது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேர்ந்தால், அவருடைய குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு உத்திரவாதம் உறுதி. இதற்கான வருடாந்திர பிரீமியம் வெறும் 436 ரூபாய் மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒண்ணரை ரூபாய் மட்டுமே. இந்தத் திட்டத்தோடு இதுவரை 27 கோடிக்கும் அதிகமானோர் இணைந்திருக்கிறார்கள். இதன் மூலம் தேசத்தின் சுமார் 11 இலட்சம் குடும்பங்களுக்குக் கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் உதவி கிடைத்திருக்கிறது.
இந்தப் புள்ளிவிவரங்கள் மிகவும் பெரியவை. இந்தப் புள்ளிவிவரங்களின் பின்னணியில், லட்சக்கணக்கான குடும்பங்களின் சொந்தக் கதைகள்-சோகக்கதைகள் பல உண்டு. ஏதோ ஒரு தாயால் தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்கு உதவி கிடைக்கிறது, ஏதோ ஒரு மனைவிக்குத் தன் குடும்பப் பொறுப்புக்களைச் சமாளிக்கத் தேவையான உதவி கிடைக்கிறது. பலமுறை, பெரிய அளவிலான பாதுகாப்பின் தொடக்கம் மிகவும் சிறிய அளவு நிதி மற்றும் சின்னதொரு முன்னெடுப்பால் தான் சாத்தியப்படுகிறது. ஒரு சிறிய தீர்மானம், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் அனைவரிடமும் நான் வேண்டிக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் குடும்பத்திலே இந்தத் திட்டங்களைப் பற்றிய தகவல்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மனதின் குரலில் நாம் இப்போது பேச இருக்கும் சிறியதொரு விஷயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமூகத்திலே பீடமிட்டு அமர்ந்திருக்கிறது. அது தான் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கை என்பது பல வேளைகளில் தவறான புரிதல் மட்டுமல்ல. அது பயத்தை ஏற்படுத்துகிறது, எப்போது பயம் மனதில் பீடிக்கிறதோ, மனிதன் வாய்மையைக் காண மறுக்கிறான். மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்கள், பிறகு எந்த ஆதாரமோ, உண்மை அம்சமோ இல்லாமலேயே முடிவுகளை எடுக்கிறார்கள், இதனால் பெரும் தீமைகள் விளைகின்றன. ஆனால், அறிவியல், அனுபவம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலே இந்த நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கும் மனிதர்களும் அதே சமூகத்திலே இருக்கிறார்கள். மூடநம்பிக்கை தொடங்கி நம்பிக்கை வரையிலான இந்தப் பயணம் எளிதானது அல்ல, இன்று இப்படிப்பட்ட ஒரு வெற்றிப் பயணம் பற்றித் தான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அசாமிலே ஒரு பறவையைக் காண முடியும், அதன் பெயர் ஹர்கிலா. ஹர்கிலா ஒரு அரியவகைப் பறவை. இயற்கையைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்தப் பறவை. ஆனால் அசாமின் சில பகுதிகளில் நீண்ட காலமாகவே இது அமங்கலமான பறவையாகக் கருதப்பட்டது. தங்கள் அக்கம்பக்கங்களில் இதைக் காண்பதை மக்கள் விரும்புவதில்லை. இந்த ஹர்கிலாவின் கூடுகள் இருக்கும் மரங்களைக்கூட பல வேளைகளில் அவர்கள் வெட்டி விடுவதும் உண்டு. சுற்றுச்சூழலின் தூய்மைக்கு உதவும் ஒரு பறவையான ஹர்கிலாவை மக்கள் பயத்தின் காரணமாக வேட்டையாடி வருகிறார்கள்.
அறிவியலாரான பூர்ணிமா தேவி பர்மன் இவை அனைத்தையும் கவனித்தார். மக்கள் மனதிலே இருக்கும் இந்தத் தவறான எண்ணத்தை மாற்ற உறுதி பூண்டார். பெண்களுடன் உரையாடினார், அறிவியல் ரீதியான சான்றுகளை அளித்துப் புரிய வைத்தார், மெல்லமெல்ல பெண்கள் இந்த இயக்கதோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். பிறகு ஒரு பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எந்தப் பறவை ஒருகாலத்தில் அமங்கலமானது என்று விரட்டப்பட்டதோ, அதுவே கிராமங்களின் அடையாளமாக ஆகிப் போனது. ஆயிரக்கணக்கான ஊரகப்பகுதிப் பெண்கள் ஹர்கிலாவைக் காப்பாற்ற முன்வந்தார்கள். இன்று இவர்கள் ஹர்கிலா படை என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் சமூகத்திற்கு எதிராகப் போராடினார்கள். சமூகத்திற்குப் புரியவைக்க இரவுபகலாகச் செயல்பட்டார்கள், மூடநம்பிக்கையைப் புறந்தள்ளினார்கள். சரியான தகவல் கொண்டு சேர்க்கப்பட்டால், பல்லாண்டுக்காலப் பழமையான எண்ணத்தைக் கூட மாற்றிவிட முடியும் என்பதை அவர்கள் செய்து காட்டினார்கள்.
யார் விளையாடுகிறார்களோ, அவர்கள் வெல்கிறார்கள் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. இன்று தேசத்திலே இப்படிப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. முந்தைய காலத்தோடு ஒப்பு நோக்குகையில், இப்போது அதிக அளவிலான இளைஞர்கள் விளையாட்டுக்களைத் தங்களுடைய தொழிலாகவே ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். நாகாலாந்தில் நடந்த இரண்டு மிகவும் சுவாரசியமான விஷயங்கள் குறித்த தகவல்கள் எனக்குக் கிடைத்திருக்கிறது.
முதல் முயற்சி, நாகாலாந்து பேபி லீக். பெயரைக் கேட்டவுடனேயே இது சிறிய குழந்தைகள் தொடர்பான சாதாரண கூட்டிணைவாக இருக்கும் என்று தோன்றலாம், ஆனால் அப்படி அல்ல. இது 5 முதல் 10-12 வயதுடைய சிறிய குழந்தைகளுடைய ஒரு அசாதாரணமான கூட்டிணைவாகும். இந்தக் குழந்தைகளுக்கு, கால்பந்தாட்டக்காரர்களின் கூட்டிணைவோடு ஒரு தொடர்பு இருக்கிறது; அவர்கள் இவர்களுக்கு வேகம் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள உத்வேகம் அளிக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதன் தொடக்கம் நாகாலாந்தின் அதிகப்படியான குழந்தைகளைக் கால்பந்தாட்டத்தோடு இணைப்பதற்காக செய்யப்பட்டது. 5 முதல் 12 வயதுடைய ஆண்-பெண் குழந்தைகள் இதிலே கலந்து கொள்ள முடியும். இந்தக் கூட்டிணைவு இப்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. இந்தக் கூட்டிணைவு குழந்தைகளின் மனதிலே கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாகாலாந்திலே மேலும் ஒரு நல்ல முயற்சி நடந்தேறி வருகிறது. இதன் பெயர் நாகாலாந்து பெண்கள் ஃபுட்சால் கூட்டிணைவு. உங்களுக்கு வேண்டுமானால் இந்த ஃபுட்சால் என்பது புதிய பெயராக இருக்கலாம், ஆனால் ஃபுட்சால் என்பது உள்ளரங்குக் கால்பந்தாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இதிலே தலா ஒரு அணியில் ஐந்து வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். விளையாட்டு மைதானமும் கூட கால்பந்தாட்டக் களத்தை விட மிகவும் சிறியதாக இருக்கிறது. இதன் காரணத்தால் ஆட்டக்காரர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்களுடைய உத்திகளையும், திறன்களையும் சிறப்பான வகையிலே பயன்படுத்தியாக வேண்டியிருக்கிறது. நாகாலாந்தின் பெண்கள் ஃபுட்சால் கூட்டிணைவு, தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட நமது பெண்களுக்கு அருமையான சந்தர்ப்பமாக இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புக்களுக்காக நான் நாகாலாந்தின் மக்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இத்தகைய முயற்சிகள், தேசத்தின் பிற பாகங்களுக்கும் உள்ளெழுச்சியை அளிக்கிறது.
இது தொழில்நுட்ப யுகம். நாள்தோறும் ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன. புதிய புதிய செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த வேளையிலே ஒரு கேள்வி மிகவும் மகத்துவம் வாய்ந்தது, அதாவது மக்களின் படைப்பாற்றலை எவ்வாறு பாதுகாத்துப் பராமரிப்பது என்பது தான். புதிய தொழில்நுட்பத்தோடு கூடவே முன்னேறும் அதே வேளையிலே நாம் நமது வேர்களோடும் எப்படி இணைந்திருப்பது? இந்த வினாக்களுக்கான விடையை, நாலந்தா பல்கலைக்கழகத்தார் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நம்முடைய நாலந்தா பல்கலைக்கழகம் இப்போது புதிய அவதாரம் எடுத்து, பாரதத்தின் எதிர்காலத்திற்கு உரமூட்டி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நாலந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கும் வாய்ப்புக் கிட்டியது. நாலந்தா பல்கலைக்கழகம் வாதவிவாதங்களில் ஈடுபடும் நமது பழைய மரபினை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள். வாதவிவாதங்களில் ஈடுபடுதல் என்பது ஏதோ தனது தரப்பை முன்வைப்பதற்கான ஊடகம் மட்டுமல்ல. இந்த வாதவிவாதங்கள், இந்தக் கடைசல் என்பன ஒழுங்குமுறையோடுகூடிய செயல்பாடு. இதிலே தர்க்கத்தோடு கூடவே, ஆதாரங்களுடன், அவரவர் தத்தமது வாதங்களை-கருத்துக்களை முன்வைப்பது அவசியம், அதிலே திறமைசாலிகளாக இருக்கவும் வேண்டும்.
மற்றவர்களின் கருத்துக்களைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டு, புரிந்து கொள்ளும் கற்றலும் கூட இந்த வாதவிவாதச் செயல்பாட்டில் கிடைக்கிறது. நாலந்தா பல்கலைக்கழகத்தார் தங்களுடைய பட்டமளிப்பு விழாவின் ஒரு அங்கமாக ஆக்கியிருக்கிறார்கள் என்பது எனக்குக் களிப்பை அளிக்கிறது. இதிலே கலந்து கொண்டவர்களில், பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பண்டைய பாரம்பரியத்தை இன்றைய காலகட்டத்தோடு இணைக்கும் ஒரு முயற்சி என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. இதன் பொருட்டு நான் நாலந்தா பல்கலைக்கழகத்தாருக்குப் பற்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பாக நீங்களும் சிந்தனை செய்யலாம் என்று நான் நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
வேர்களோடு இணைந்திருக்கும் அதே நேரத்தில் இளைஞர்களைப் புதிய தொழில்நுட்பத்திற்காகவும் தயார் செய்வது என்ற மேலும் ஒரு நல்ல முயற்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருக்கும் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைகளில் பி.டெக் – தொழில்நுட்பத்தில் இளநிலைப் படிப்பைத் தொடங்க இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தோடு பாரதத்தின் பாரம்பரியமான ஞானத்தை இணைக்கும் திசையில் ஒரு மகத்துவம் வாய்ந்த படியாகும். இதனால் பாரதநாட்டு மொழிகளுக்கு, புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் தயாரித்தளிப்பதில் உதவிகரமாக இருக்கும். நமது பண்டைய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல்மயமாகச் செய்து பாதுகாக்கும் பணிக்குப் புதிய வேகம் கிடைக்கும். மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தாருக்கு இந்த முயற்சி தொடர்பாக நான் பற்பல நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பாரதநாட்டுக் கலாச்சாரமானது உலகின் பல்வேறு பாகங்களைச் சென்றடைந்து வருகிறது. நமது பாடல்கள், இசை மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை உலகத்தார் அனைவரும் அறிந்து வருகிறார்கள், ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். பாரதத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலான கரிபியன் கடற்பகுதியிலே டொமினிகன் ரிபப்ளிக் என்ற பெயரிலான ஒரு தேசம் உண்டு. அங்கே பாரத நாட்டவரின் எண்ணிக்கை சுமார் 100 இருக்கலாம், இன்னும் குறைவாகவும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி, பாரதநாட்டுக் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடைய ஒரு மிக அருமையான முயற்சி அங்கே நடந்து வருகிறது. அங்கே ஸ்பானிஷ் மொழி பேசும் சிலர் ஒரு புதிய குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் குழுவின் பெயர், பிரும்மகமல் டொமினிகானா. குழுவின் உறுப்பினர்கள் இணைந்து வேதகால இலக்கியத்தைப் படிக்கிறார்கள். இவர்கள் வேத மந்திரங்களின் உச்சரிப்பு வெளிப்பாட்டையும் கற்று வருகிறார்கள். இதற்கான எந்தவிதமான முறையான பயிற்சியும் இவர்களிடம் இல்லை. ஆனால் இவர்கள் ஒலிப்பதிவுகளைக் கேட்டு வேத மந்திரங்களின் சரியான உச்சரிப்பு வெளிப்பாட்டைக் கற்றிருக்கிறார்கள்.
இன்று இவர்கள் பல மந்திரங்களை மிகச் சிறப்பாக ஜபித்து வருகிறார்கள். இவற்றில் புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம், ஸ்ரீ ருத்ரம், துர்கா சூக்தம், தேவி மகாத்மியம் ஆகியன அடங்கும். பாரதத்திலிருந்து இத்தனை தொலைவில் இருந்தும்கூட, நமது பாரம்பரியங்களைக் கற்கும் அவர்களின் இந்த முயற்சி மிகவும் கருத்தூக்கமளிக்கவல்லது. பிரும்மகமல் டொமினிகானா குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அவர்களின் முயற்சிகளுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதநாட்டுக் கலாச்சாரத்தை உலகில் மிகவும் விரும்பப்படுவதாக ஆக்குவதில் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடும் அனைவரையும் நான் இதயப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
மேகாலயத்தின் அடையாளம் மேகங்களோடு, அழகான காட்சிகளோடு. யார் மேகாலயா மாநிலம் செல்கிறார்களோ, அங்கிருப்போரின் இயல்பான அன்பு பாராட்டும் தன்மை நீண்டகாலம் வரை மனதை வருடிக் கொடுக்கும். ஆனால் மேகாலயத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம் ஒன்று குறித்து இன்றைய மனதின் குரலில் நாம் விவாதிக்க இருக்கிறோம். அது தான் மேகாலயத்தின் Root Bridge. இது பாதையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Route-ரூட் அல்ல, வேர்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Root-ரூட். அதாவது வேர்ப்பாலம். இந்த வேர்ப்பாலங்களின் கதை மிகவும் சுவாரசியமானது.
இந்தப் பாலங்கள் சில நாட்களிலோ, சில ஆண்டுகளிலோ உருவாவதில்லை. இந்த வேர்கள் நீர்ப் பெருக்குகளைத் தாண்டி கொண்டு செல்லப்படுகிறது. காலப்போக்கில் இதுவே ஒரு பலமான பாலமாக ஆகிறது. இந்தப் பாலங்களுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. இவை வாழும் பாலங்கள். காலப்போக்கில் இவை மேலும் பலமடைகின்றன. இவற்றிலே மேகாலய மக்களின் படைப்புத்திறனை நம்மால் பார்க்க முடிகிறது. இவற்றின் பின்னணியிலே பல்லாண்டுக்கால பொறுமை மற்றும் இயற்கையின்பால் ஆழமான மரியாதை புலனாகிறது. மனிதன் இயற்கையோடு இணைந்தால் எத்தனை அற்புதமான பொருட்களை உருவாக்க முடியும் என்பதை இந்தப் பாலங்கள் நமக்கு உரைக்கின்றன. இவை நமது தேசத்தின், இந்த மண்ணின் மரபுகள். யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுசார் இடங்கள் வலைப்பின்னலில் மேகாலயத்தின் வேர்ப்பாலங்களை இணைக்க வேண்டும் என்று பாரதம் விண்ணப்பித்திருக்கிறது.
சூழல் மாற்றம் காரணமாக இந்த வேர்ப்பாலங்கள் முன்பாக பல சவால்களும் எழுகின்றன. இப்படிப்பட்ட வேளையிலே, மேகாலய மாநில மக்கள், இந்த இயற்கை மரபுச் சின்னங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மிகச்சிறப்பாக நிறைவேற்றி வருகின்றார்கள். இப்படிப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது கூட எளிதாக இருக்கவில்லை. பிறகு உள்ளூர் மக்கள் இத்தகைய பாலங்களின் எண்ணிக்கை மீது கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இதன் பிறகு சமூகங்கள், இந்தப் பாலங்களின் பராமரிப்புத் தொடர்பான தங்களுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இன்று உள்ளூர் மக்கள், 120க்கும் அதிகமான வேர்ப்பாலங்களைப் பராமரித்து வருகின்றார்கள். சில குழுக்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாலங்களின் நிலைமையை ஆராய்ந்து வருகிறார்கள். சிலர் தங்களுக்கு அருகிலே இருக்கும் பகுதிகளை பலப்படுத்த Nursery-நாற்றுப்பண்ணையை தயார் செய்து வருகிறார்கள்.
இதைப் போலவே இவற்றின் பாதுகாப்பிற்காக வேண்டி ஒரு மொத்த சூழலமைப்பே தயாராகி விட்டது. இந்த ஆண்டு ஹைலீ வார் அவர்களுக்கு பத்ம விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம். தனது வாழ்க்கையின் 50க்கும் அதிகமான ஆண்டுகளை இந்த வேர்ப்பாலங்களைப் பராமரிப்பதிலேயே செலவு செய்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வு நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது. நீங்கள் எப்போதேனும் இந்த வேர்ப்பாலங்களில் பயணித்திருந்தீர்கள் என்றால், கண்டிப்பாக அதன் படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய படங்கள் மற்றவர்களுக்கும், மேகாலயத்தின் இந்த அற்புதமான மரபு பற்றித் தெரிந்து கொள்ள உத்வேகம் அளிக்கும்.
நமது கிராமங்கள் தூய்மையாக இருக்க வேண்டும், நமது நகரங்கள் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்று நாமனைவரும் விரும்புகிறோம். ஆனால், நம்மருகே திரளும் குப்பையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பதை நாம் யாராவது யோசித்திருப்போமா? இது மற்றவர்களுடைய பொறுப்பு, அவர்கள் சுத்தமாவதைப் பார்த்துக் கொள்வார்கள் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், தங்களுடைய சிந்தனை வாயிலாக நமக்கு உள்ளெழுச்சி அளிக்கவல்ல சிலர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். மத்திய பிரதேசத்தின் ராஜ்கட் மாவட்டத்தைச் சேர்ந்த பியாவராவின் சில சகோதரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இவர்கள் தங்களுக்கு அருகிலே பரவிக் காணப்படும் நெகிழிக் குப்பைகளை அகற்ற உறுதி பூண்டார்கள். எல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் கருதவில்லை. இவர்கள் தாங்களே நகர்முழுவதிலிருந்தும் நெகிழிக் குப்பைகளையும், காலி பாட்டில்களையும் சேகரிக்கத் தொடங்கினார்கள்.
மெல்லமெல்ல இந்த முயற்சி முன்னேறிச் செல்லத் தொடங்கியது, பிறகு அந்த நெகிழி சூழலுக்கு நேசமான செங்கற்களாக உருவாகத் தொடங்கியது. இன்று இதே சூழலுக்கு உகந்த செங்கற்களின் பயன்பாடு பொதுவிடங்களுக்கு அழகு சேர்க்கப் பயன்பட்டு வருகிறது. ராஜ்கட்டிலே கடந்த சில மாதங்களாக பல்லாயிரக்கணக்கான கிலோ அளவிலான நெகிழிகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அவை சிறப்பான வகையிலே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, எந்த நெகிழி முன்பெல்லாம் நகரை மாசுபடுத்தி வந்ததோ, அதுவே இன்று இந்தச் சகோதரிகளின் முயற்சியால் நகரின் அழகை அதிகரிப்பதில் பங்காற்றி வருகிறது. பியாவ்ராவின் அனைத்து சகோதரிகளுக்கும், இந்த இயக்கத்தோடு இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறப்பான விஷயம் குறித்துப் பேச எனக்குப் பலர் கடிதங்கள் வாயிலாக ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இந்த விஷயம் பிள்ளையார் சதுர்த்தி உற்சவத்தோடு தொடர்புடையது. பார்க்கப்போனால் பிள்ளையார் சதுர்த்திக்கு இன்னும் போதுமான நேரம் இருந்தாலும், இந்த விஷயம் குறித்து இப்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று பலர் என்னிடம் விண்ணப்பித்திருந்தார்கள். உள்ளபடியே, பிள்ளையார் சிலைகளை உருவாக்கும் வேலை மிகவும் முன்னதாகவே தொடங்கி விடுகிறது. திருவுருவங்களைத் தயாரிப்போர், அதன் வியாபாரத்தில் இணைந்தவர்கள் இப்போதிலிருந்தே செயல்படத் தொடங்கி விடுவார்கள். ஆகையால் நான் உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் வீடு, சமூகம் அல்லது அருகிலே இருக்கும் இடங்களில் பிள்ளையாரின் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும் போது, அவை நமது தேசத்தின் மண்ணால் உருவாக்கப்பட்டவையாக, நமது மண்பாண்டம் தயாரிப்போரால், உள்ளூர் கைவினைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற வகையில் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
யாரெல்லாம் பிள்ளையார் திருவுருவச் சிலைகளை உருவாக்குகிறார்களோ, அவர்களிடமும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் மண்ணாலான திருவுவச் சிலைகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும். அதே போல யாரெல்லாம் திருவுருவ சிலைகளை வாங்குகிறார்களோ, அவர்களும் பிள்ளையாரின் திருவுருவச் சிலை எதனால் செய்யப்பட்டது, எந்த நாட்டில் உருவானது என்பதையும் கவனித்து வாங்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பேரிஸால் தயாரிக்கப்பட்ட திருவுருவச் சிலைகளைக் கண்டிப்பாக வாங்க வேண்டாம். மண்ணாலான திருவுருவச் சிலைகளை வழிபட்ட பிறகு, நாம் இயல்பான வகையிலே நீரிலே கரைக்கிறோம். இதனால் நமது நதிகள், ஏரிகள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
நமது நம்பிக்கையும் பராமரிக்கப்படுவதோடு, இயற்கையின்பால் நமது கடமையும் நிறைவேறுகிறது. நாம் உள்ளூர் கைவினைஞர்களிடமிருந்து திருவுருவச் சிலைகளை வாங்கும் போது, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் கொள்கை வலுவடைகிறது. இந்தமுறை பிள்ளையார் சதுர்த்தியன்றும், இப்படிப்பட்ட அனைத்துக் கொண்டாட்டங்களின் போதும், இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் கண்டிப்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டும், நாட்டுநலனில் அடுத்தடுத்த படிகளை முன்வைப்போம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
நமது தேசத்தின் மிகப்பெரிய சக்தி என்றால் அது நமது தேசத்தின் மக்கள் தாம். தேசத்தின் பல்வேறு பாகங்களில் நடைபெறும் முயற்சிகள் நமக்கு நிறைய கற்பித்தல்களை அளிக்கின்றன. நம் மனதிலே உறுதிப்பாடு இருந்தால், சமூகத்தோடு இணைந்து சென்றால், எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதை இந்த முயற்சிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. நீங்கள் உங்கள் அருகிலே நடக்கும் இப்படிப்பட்ட முயற்சிகள் குறித்து எனக்குக் கண்டிப்பாக எழுதி வாருங்கள். உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய சிந்தனைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வாருங்கள், முடிந்தால், உங்கள் அருகிலே எந்தவொரு சின்ன முன்னெடுப்பு இருந்தாலும், அது ஒட்டுமொத்த தேசத்திற்குமே உத்வேகம் அளிக்கவல்லதாக ஆகலாம்.
அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம். நாட்டுமக்களின் சில புதிய முயற்சிகள் குறித்த விவாதத்தில் ஈடுபடுவோம். அதுவரை நீங்கள் உங்களுடைய மற்றும் உங்களுடைய குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள், அப்புறம்..... நீர் சேமிப்பை எக்காலத்திலும் மறந்துவிட வேண்டாம். மழைநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் பாதுகாக்க வேண்டும். ‘Catch the Rain’ - மழைநீரைச் சேமியுங்கள் என்ற இந்த இயக்கம் எக்காரணம் கொண்டும் தொய்வடைய விடக்கூடாது. நாமனைவரும் இணைந்து மழையின் ஒவ்வொரு சொட்டு நீரையும் விரயமாகாமல் பாதுகாக்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் என் சிறப்பு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம். இவ்வாறு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.