நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி தகவல்

நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி தகவல்
Updated on
1 min read

புது டெல்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும், 41 நாடுகளில் இருந்து இந்தியா எரிபொருள் இறக்குமதியில் ஈடுபடுவதாகவும் மக்களவையில் பிரதமர் மோடி கூறினார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் பதற்றம் குறித்தும், அதனால் நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதைப் போக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், "கடந்த பத்தாண்டுகளில், நெருக்கடி காலங்களுக்காக கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதற்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது. இன்று, இந்தியா வசம் 53 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. மேலும், இதை 65 லட்சம் மெட்ரிக் டன்களாக உயர்த்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 11 ஆண்டுகளில் எரிபொருள் இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, நாம் 27 நாடுகளில் இருந்து எரிபொருள்களை இறக்குமதி செய்து வந்தோம். ஆனால் இன்று 41 நாடுகளில் இருந்து எரிபொருள்களை இறக்குமதி செய்கிறோம். கடந்த பத்தாண்டுகளில், கச்சா எண்ணெய் சேமிப்பிற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். அதனால் நம்மிடம் இப்போது பெரியளவில் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.

மேலும், நமது சுத்திகரிப்புத் திறனும் தற்போது அதிகரித்துள்ளது. சீரான விநியோகத்தைப் பராமரிக்க இந்தியா உலகளாவிய கூட்டாளிகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. நாங்கள் பல நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். எரிவாயு மற்றும் எண்ணெய் தேவைகளின் சீரான விநியோகத்தை உறுதிப்படுத்த எங்களால் முடிந்தவரை முயற்சித்து வருகிறோம்.

இருப்பினும், அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையால் அபாயங்களும் ஏற்படுகின்றன. கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் மற்றும் பல எரிபொருள் இறக்குமதியின் பெரும் பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இந்த வழித்தடம் தடுக்கப்பட்டிருந்த போதிலும், நமது தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை நாங்கள் உறுதிசெய்து வருகிறோம்.

நாங்கள் 60 சதவிகிதம் எல்பிஜி-யை இறக்குமதி செய்கிறோம். ஆனாலும், வீட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி தகவல்
இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மையம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in