

புதுடெல்லி: இரண்டு மாதங்களுக்குப் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும், எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும் தெரிவித்துள்ள மத்திய அரசு, பீதியுடன் எரிபொருள் வாங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் உரையாற்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, ‘‘நமது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் இயங்கி வருகின்றன. சில்லறை விற்பனை நிலையங்களில் எந்தவிதமான தட்டுப்பாடும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலராக இருந்தது. அது தற்போது 100 டாலரைக் கடந்துள்ளது. இந்த திடீர் உயர்வு இருந்தபோதிலும் உள்நாட்டு நுகர்வோருக்கான பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த உயர்வும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை ஏப்ரல் 6, 2022-க்குப் பிறகு உயர்த்தப்படவில்லை. மார்ச் 2024-ல் ரூ.2 குறைக்கப்பட்டது. அது தற்போதும் நடைமுறையில் உள்ளது.
சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து உள்நாட்டு நுகர்வோரைப் பாதுகாக்க விலைகளில் எந்த உயர்வும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. இருப்பினும், நமது எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் இரண்டிலும் குறைவான வருவாயே கிடைத்துள்ளது. உள்நாட்டு சந்தையில் விமான எரிபொருள் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசு அவற்றுக்கு ஏற்றுமதி வரியை விதித்துள்ளது.
நம்மிடம் போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது என்பதை நான் உறுதிபட தெரிவிக்கிறேன். எனவே, பொதுமக்கள் பீதியுடன் எரிபொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.