வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 70% அளவுக்கு சீரடைந்ததாக மத்திய அரசு தகவல்

வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 70% அளவுக்கு சீரடைந்ததாக மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அளவுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 70% அளவுக்கு சீரடைந்துள்ளதாகவும் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டு விளக்கக் கூட்டத்தில் பேசிய பெட்ரோலியத் துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா, ‘‘நாம் தற்போது ஒரு போர்ச் சூழலில் இருக்கிறோம் என்பது நீங்கள் அறிந்ததுதான். மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் காரணமாக, நமது எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி ஆகிய அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மற்ற எரிபொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இருப்பினும், இந்த சூழ்நிலையை திறம்பட நிர்வகிக்க மத்திய அரசு பல்வேறு நிலைகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி நம்மிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கான விநியோகங்கள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளன.

எல்பிஜி மற்றும் பிஎன்ஜி விநியோகத்தைப் பொருத்தவரை நிலைமை சீராகவும் திருப்திகரமாகவும் உள்ளது. நமது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 100% திறனுடன் இயங்கி வருகின்றன. உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 20% அதிகரித்துள்ளது.

எல்பிஜி-யைப் பொறுத்தவரை இந்தியா பெருமளவில் இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது. இதில், 90% இறக்குமதிகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகின்றன. அரசாங்கம் உள்நாட்டு நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக, வணிக ரீதியிலான எல்பிஜி விநியோகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு படிப்படியான மற்றும் சீரான முடிவுகளின் மூலம் வணிக ரீதியிலான விநியோகம் 20% வரை சீரடைந்தது. பிஎன்ஜி (குழாய் வழி எரிவாயு) விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், கூடுதலாக 10% விநியோகம் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த அளவு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது இது 70% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் விளைவாக மார்ச் 14 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில் வணிக நுகர்வோருக்கு சுமார் 30 ஆயிரம் டன் வணிக எல்பிஜி விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், உணவகங்கள், சாலையோர உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலை உணவகங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், எஃகு, வாகன உற்பத்தி, ஜவுளி, சாயங்கள், ரசாயனம், பிளாஸ்டிக் ஆகிய துறைகளும் முன்னுரிமை பிரிவுகள் என அரசின் சமீபத்திய ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'சுதந்திர வர்த்தக எல்பிஜி' (FTL) பிரிவின் கீழ், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சுமார் 30,000 சிறிய அளவிலான (5 கிலோ) சிலிண்டர்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார்.

வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 70% அளவுக்கு சீரடைந்ததாக மத்திய அரசு தகவல்
போரில் எங்களது ‘தற்காப்பு நடவடிக்கை’ தேவைப்படும் வரை தொடரும்: ஐ.நா.-வில் ஈரான் திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in