

புதுடெல்லி: இந்தியாவின் 12 அணு குண்டுகள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் உலக நாடுகளின் ராணுவ வலிமை குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி 2026-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இதன்படி ரஷ்யாவிடம் 4,400 அணு குண்டுகள் உள்ளன. அமெரிக்காவிடம் 3,700 அணு குண்டுகள் உள்ளன.
சீனாவிடம் 620, பிரான்ஸிடம் 290, பிரிட்டனிடம் 225, இந்தியாவிடம் 190, பாகிஸ்தானிடம் 170, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 60 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட அணு குண்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அந்த நாட்டில் 12 அணு குண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. எனினும் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமல் செய்து பதற்றத்தை தணித்தன.
தற்போதைய சூழலில் ரஷ்யா- உக்ரைன், அமெரிக்கா - இஸ்ரேல்-ஈரான், இந்தியா- பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, காங்கோ-ருவாண்டா ஆகிய நாடுகள் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5-ம் இடத்தில் இந்தியா
ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாடு ஓராண்டில் 954 பில்லியன் டாலரை ராணுவத்துக்காக செலவிடுகிறது. இதற்கு அடுத்து சீனா (336 பில்லியன் டாலர்) 2-ம் இடத்திலும், ரஷ்யா (190 பில்லியன் டாலர்) 3-ம் இடத்திலும், ஜெர்மனி (114 பில்லியன் டாலர்) 4-ம் இடத்திலும் உள்ளன.
இந்தியா 92.1 பில்லியன் டாலருடன் (சுமார் ரூ.8.77 லட்சம் கோடி) 5-ம் இடத்தில் உள்ளது. 2021-25 காலகட்டத்தில் உலகளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உக்ரைனும் முன்னணியில் உள்ளன.