

புதுடெல்லி: ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகுக்கு இந்தியா தலைமை தாங்குவதே இலக்கு என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் முடிவதை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்திய இளைஞர்கள், தொழில்முனைவோர் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகுக்கு இந்தியா தலைமை தாங்கு வதே இலக்கு. ஸ்டார்ட் அப் இந்தியா ஒரு புரட்சியாக உருவெடுத்துள்ளது. 45 சதவீத அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்கிறார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் உலகளவில் இந்தியா 2-ம் இடம் வகிக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் இந்த வளர்ச்சி இந்தியாவின் ஆற்றலை மேம்படுத்துகிறது. 2, 3-ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இன்றைய ஆராய்ச்சி நாளைய அறிவுசார் சொத்துரிமையாக மாறுகிறது.
இதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், முதலீட்டால் உந்தப்படும் வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதற்கும் தேசியத் திட்டமாக, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் 2016-ம் ஆண்டு ஜனவரி 16-ல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், இந்தியாவை வேலை தேடுபவர்களின் நாடாக இல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களின் நாடாகமாற்றுவதாகும்.